செய்திகள்
சாரம் தென்றல் நகரில் மு.க.ஸ்டாலின் பேசியபோது எடுத்த படம். அருகில் வேட்பாளர் ஜான்குமார் உள்ளார்.

தமிழக அமைச்சர்கள் பதவிக்காக மோடியின் காலில் விழுந்து கிடக்கிறார்கள்- மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

Published On 2019-10-18 05:58 GMT   |   Update On 2019-10-18 05:58 GMT
தமிழக அமைச்சர்கள் பதவிக்காக மோடியின் காலில் விழுந்து கிடக்கிறார்கள் என்று புதுவையில் பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின். கூறியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் புதுவையில் பிரசாரம் செய்தார். சாரம் தென்றல் நகரில் தொடங்கி திறந்த வேனில் சென்று ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், சாமிபிள்ளை தோட்டம் ஆகிய பகுதிகளில் ஸ்டாலின் பிரசாரத்தின் போது பேசியதாவது:-

வேட்பாளர் ஜான்குமார் ஏற்கனவே நெல்லித்தோப்பில் எம்.எல்.ஏ. ஆனவர். அவருக்கு அறிமுகம் தேவையில்லை. முதல்-அமைச்சராக பதவியேற்ற நாராயணசாமி இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் அவர்தான் கைகொடுத்தார். இப்போது அவரே ‘கை’ சின்னத்தில் போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் நேரடியாக பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. புதுவையில் நேரடியாக நடக்காவிட்டாலும் கவர்னர் மூலம் மறைமுகமாக நடக்கிறது. இதைத்தான் அப்போதே அண்ணா சட்டமன்றத்தில் பதிவு செய்தார்.

அதாவது ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டிற்கு கவர்னர் எதற்கு? என்றார். அதாவது ஆட்டுக்கு தாடியும், நாட்டிற்கு கவர்னரும் வேஸ்ட். இந்த மாநிலத்தை வளர்ச்சி அடைய செய்ய முதல்-அமைச்சர் எத்தனையோ திட்டங்களை அறிவிக்கிறார். அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்.

ஆனால், கவர்னர் கிரண்பேடி அதற்கு தடைக்கல்லாக தடுத்து நிறுத்தும் அயோக்கியத்தனத்தில் ஈடுபடுகிறார். இதற்கு எடுத்துக்காட்டாக இலவச அரிசி திட்டத்தை கூறலாம். இலவச அரிசி வழங்கப்படாமல் இருக்க கவர்னரே காரணம்.

இத்தகைய நிலையில் பா.ஜனதா ஆதரவோடு என்.ஆர். காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பச்சை துரோகி. இதனை நான் சொல்லவில்லை. மறைந்த ஜெயலலிதா தான் கூறினார்.

2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வினர் கூட்டணி வைத்து போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ் தேர்தல் வெற்றிக்கு பிறகு அ.தி.மு.க.வை கழட்டி விட்டு ஆட்சி அமைத்தது. அப்போதுதான் ஜெயலலிதா இந்த வார்த்தையை கூறினார்.

மேலும் ரங்கசாமி கூட்டணி தர்மத்தை குழிதோண்டி புதைத்துவிட்டார். அவர் நம்பிக்கை துரோகி. துரோகம் செய்வது அவருக்கு கைவந்த கலை. புதுவை மக்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்று ஜெயலலிதா கூறினார்.

என்.ஆர்.காங்கிரசுக்கு வாக்களிப்பது தற்கொலை செய்வதற்கு சமம் என்றும் பேசினார். இதை ஒவ்வொரு அ.தி.மு.க.வினரும் கவனிக்கவேண்டும் என்பதற்காகத்தான் நான் கூறினேன். இதை அ.தி.மு.க. தொண்டர்கள் உணர்ந்து பார்க்கவேண்டும்.

ஜெயலலிதாவுக்கு பிடிக்காதது பாரதிய ஜனதா. அந்த கட்சியோடு ஒருபோதும் கூட்டணி வைக்கமாட்டேன் என்றார். ரங்கசாமியை பச்சை துரோகி என்றார். ஆனால் அவர்கள் இப்போது கூட்டணி வைத்து உள்ளனர். அவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கவேண்டும்.

புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியத்தை ஆந்திர மாநிலத்துக்கு தாரை வார்க்க கவர்னர் முயற்சி செய்கிறார். இது பச்சை துரோகம். மாநிலத்துக்கு துரோகம் செய்பவர்கள் கவர்னருக்கு ஆதரவாக உள்ளனர். நாம் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் கரத்தை பலப்படுத்த வேண்டும்.

உங்களுக்கு ஒரு நல்ல முதல்-அமைச்சர் கிடைத்துள்ளார். ஆனால், தமிழகத்தில் எங்களது போதாத காலம் எடுபிடி முதல்-அமைச்சர் கிடைத்துள்ளார். அவர் விபத்தில் வந்தவர் என்று நான் கூறினால் அவருக்கு கோபம் வருகிறது. நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்கிறார். ஜெயலலிதா மறைந்ததால் அவர் முதல்-அமைச்சர் ஆனார்.

முதல்-அமைச்சர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் நாராயணசாமி. தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் காலத்தில்தான் அ.தி.மு.க. ஆட்சி நடந்தது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி அல்ல. அது எடுபிடி ஆட்சி. மத்திய அரசு சொல்வதை கேட்கக்கூடிய ஆட்சி. மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை கேள்வி கேட்காத ஆட்சி.

தட்டிக்கேட்கும் திராணி தமிழக ஆட்சியாளர்களுக்கு இல்லை. ஆனால் கவர்னரின் செயல்பாடுகளை புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கேட்கிறார். அவருக்கு கெத்து இருக்கிறது. ஜனநாயகத்தை காக்கும் முயற்சியில் அவர் ஈடுபடுகிறார்.

தமிழகத்தில் பதவிக்காக மோடியின் காலில் விழுந்து கிடக்கிறார்கள். எதிர்த்தால் பதவிபோய்விடும் என்பதால் அடிமைப்பட்டு கிடைக்கிறார்கள். மேலும் அவர்களது முறைகேடுகள் எல்லாம் சி.பி.ஐ.யின் பிடியில் உள்ளது. பதவி போனால் அடுத்த நிமிடம் ஜெயிலில் இருப்பார்கள்.

புதுவை மாநிலத்தை பொறுத்தவரை நிதி ஆயோக் கணக்கின்படி சட்டம் ஒழுங்கு, தொழில் தொடங்குவது, பொருளாதார குறியீடுகளில் புதுவை மாநிலம் 5-வது இடத்தில் உள்ளது. சுகாதாரத்துறையில் முதல் இடத்தில் உள்ளது. இது தொடர வேண்டும். மக்களுக்கு அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன். இதற்காக கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
Tags:    

Similar News