செய்திகள்
எடியூரப்பா, குமாரசாமி

‘ஏழைகளின் சகோதரன்’ திட்டத்தை ரத்து செய்தால் போராட்டம்- எடியூரப்பாவுக்கு குமாரசாமி எச்சரிக்கை

Published On 2019-09-21 01:48 GMT   |   Update On 2019-09-21 01:48 GMT
கர்நாடகத்தில் ‘ஏழைகளின் சகோதரன்‘ திட்டத்தை ரத்து செய்தால் போராட்டம் நடத்துவோம் என்று எடியூரப்பாவுக்கு குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஏழைகளின் நலனுக்காக ‘ஏழைகளின் சகோதரன்‘ (படவர பந்து) திட்டத்தை அமல்படுத்தினோம். அந்த திட்டத்தை எடியூரப்பா புறக்கணித்துள்ளார். உங்களின் (எடியூரப்பா) கோபம் என் மீது மட்டும்தானே. ஆனால் ஏழை மக்கள் மீது கோபத்தை காட்டுவது ஏன்?. பழிவாங்கும் அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று எடியூரப்பா சட்டசபையில் கூறினார். ஆனால் இப்போது, நான் முதல்-மந்திரியாக இருந்தபோது செயல்படுத்திய திட்டங்களை எதிர்க்கிறீர்கள்.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் மற்றும் சிறிய வியாபாரிகளின் நலனுக்காக இந்த ஏழைகளின் சகோதரன் திட்டம் கொண்டுவரப்பட்டது. வியாபாரிகள் தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கத்தில் நாங்கள் இதை செயல்படுத்தினோம். தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்களின் சுயமரியாதை வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இந்த திட்டம் உதவுகிறது. அதையும் கொல்லும் நீங்கள், ஏழைகளின் சுயமரியாதையை கிளறி பார்க்கிறீர்கள்.

‘ஆபரேஷன் தாமரை‘ புகழ் எடியூரப்பா ஒரு புதிய கலாசாரத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளார். அதாவது எங்கள் கூட்டணி ஆட்சியில் தொகுதிகளின் வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை எடியூரப்பா குறைத்துள்ளார். இதன் மூலம் அவர் ஒரு சார்புடன் நடந்து கொள்கிறார். தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்கி கொள்ளட்டும். ஆனால் ஏற்கனவே ஒதுக்கிய நிதியை குறைப்பது என்ன நியாயம்?. இது வெட்கக்கேடான அரசியல்.

ஏழைகளின் சகோதரன் திட்டத்தை ரத்து செய்தால், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம். சாதி, மதம், அரசியல் பாகுபாடின்றி இந்த திட்டத்தில் மக்கள் பயன் அடைகிறார்கள். அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் இந்த திட்டம் முக்கிய பங்காற்றுகிறது.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News