செய்திகள்
பள்ளி மாணவிகள்

தமிழகத்தில் இன்டர்நெட் வசதியுடன் 24 சதவீத பள்ளிகள் செயல்படுகின்றன- யுனெஸ்கோ தகவல்

Published On 2021-10-08 07:07 GMT   |   Update On 2021-10-08 07:07 GMT
79 சதவீத பள்ளிகளில் வகுப்பறைகள் நல்ல முறையில் இருப்பதாகவும், 24 சதவீத பள்ளிகள் மட்டுமே இணையதள வசதியுடன் செயல்படுவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சென்னை:

யுனெஸ்கோ நிறுவனம் இந்திய அளவில் பள்ளி கல்வியின் நிலை குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது.

2019-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வின் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளன என்ற தகவலை வெளியிட்டு இருந்தது.

2021 ஆண்டுக்கான மாநிலத்தின் கல்வி அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட அளவில் சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் 2018-19-ம் ஆண்டில் ஆசிரியரும் இல்லை, வகுப்பறையும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் மொத்தம் 59 ஆயிரத்து 152 பள்ளிகள் உள்ளதாகவும் அதில் 2,631 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணி செய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 4 சதவீதம் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டும்தான் உள்ளதாக தெரிவிக்கின்றது.

இதுவே தென் மாநிலங்களான தெலுங்கானாவில் 16 சதவீதமாகவும், ஆந்திராவில் 14 சதவீதமாகவும் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேரளாவில் 2 சதவீதம் பள்ளிகளில் மட்டும் ஒரு ஆசிரியர் உள்ளனர்.

மேலும் தமிழகத்தில் 61 சதவீத பள்ளிகளில்தான் நூலகம் உள்ளது. ஆனாலும் பெரும்பாலான பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக கழிப்பிட வசதி இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. 94 சதவீத பள்ளிகளில் குடிநீர் வசதி இருப்பதாகவும், 93 சதவீத பள்ளிகள் மாணவர்களுக்கு கழிப்பிட வசதியும் 97 சதவீத பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பிட வசதியும் செய்யப்பட்டு இருப்பதாக அறிக்கை தெரிவிக்கின்றது.

79 சதவீத பள்ளிகளில் வகுப்பறைகள் நல்ல முறையில் இருப்பதாகவும், 24 சதவீத பள்ளிகள் மட்டுமே இணையதள வசதியுடன் செயல்படுவதாகவும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.



கொரோனா தொற்று பாதிப்பால் மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாத நிலையில் 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ம் வகுப்பு வரை நவம்பர் 1-ந் தேதி பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாணவர்கள் பள்ளிக்கு வர இருக்கிறார்கள். பள்ளி திறப்பதற்கு முன்னதாக பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளை கொண்ட குழு, பள்ளி மற்றும் வகுப்பு அளவுகளை ஆய்வு செய்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

இந்தநிலையில் இதுகுறித்து பொது பள்ளிக்கான மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:-

யுனெஸ்கோ அறிக்கையின்படி அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளிகளில் உள்ள குறைகளை கண்டறிந்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பள்ளிகளை வலுப்படுத்துவதற்கான திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்.

அரசு பள்ளிகளை ‘அருகமை’ பள்ளிகளாக அறிவித்து ஒரு பள்ளியில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டுமோ அதை அனைத்தும் இருப்பதை உறுதிபடுத்த வேண்டும்.

நவம்பர் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கின்ற நிலையில் எல்லா பள்ளிகளையும் தூய்மைப்படுத்தி கிருமிநாசினி தெளித்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குடிநீர் குழாய்கள், தொட்டிகள் சுத்தப்படுத்த வேண்டும்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளிகளை பார்வையிட்டு தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த பணியை பள்ளி கல்வித்துறையோடு, பொதுப் பணித்துறை, சுகாதாரத்துறை, வருவாய் துறை இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

Similar News