ஆன்மிகம்
திருச்செந்தூர் கடற்கரையில் முதல் முறையாக பக்தர்கள் இன்றி இன்று மாலை சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் கடற்கரையில் முதல் முறையாக பக்தர்கள் இன்றி இன்று மாலை சூரசம்ஹாரம்

Published On 2020-11-20 08:42 GMT   |   Update On 2020-11-20 08:42 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் முதல் முறையாக பக்தர்கள் இன்றி இன்று மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் நடக்கிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இன்றும், நாளையும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 15-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை 4.30 மணிக்கு பாரம்பரிய முறைப்படி கடற்கரையில் நடக்கிறது. விழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகத்தை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

காலையில் யாகசாலையில் உள்ள உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரமாகி சுவாமி, வள்ளி - தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி 108 மகாதேவர் சன்னதி முன்பு வைத்து மகா தீபாராதனை நடைபெற்றது. அங்கு மதியம் 2 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெறுகிறது.

தொடர்ந்து சுவாமி அங்கிருந்து திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் எழுந்தருளி அங்கு சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது,

7-ம் திருவிழாவான நாளை இரவு 11 மணிக்கு சுவாமி- தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இன்றும், நாளையும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

எனினும் சூரசம்ஹாரம், திருக்கல்யாண நிகழ்ச்சிகளை பக்தர்கள் யூ-டியூப், உள்ளுர் தொலைக்காட்சிகளில் நேரலை மூலம் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக லட்சக்கணக் கான பக்தர்கள் கலந்து கொள்ளும் திருச்செந்தூர் சூரசம்ஹாரம் மற்றும் திருக் கல்யாணம் நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

நிகழ்ச்சிகளையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

நிகழ்ச்சிகளை காண வெளியாட்கள் வருவதை தடுக்க மாவட்டத்தில் 15 இடங்களிலும், திருச்செந் தூரில் 7 இடங்களிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வெளியில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் பக்தர்கள் ஊர் எல்கையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்பதால் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் இருந்து ஆங்காங்கே டிஜிட்டல் போர்டும் வைக்கப்பட்டுள்ளது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா. கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News