செய்திகள்
கமல்ஹாசன்

பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதில் பிரதமர் மோடி முன்னோடியாக செயல்பட வேண்டும்- கமல்ஹாசன்

Published On 2019-10-02 13:19 GMT   |   Update On 2019-10-02 13:19 GMT
பேனர் கலாச்சாரத்திற்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்தால் அதுவே அவருக்கு பெரிய விளம்பரமாக அமையும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரும் 11, 12 ஆம் தேதிகளில் மாமல்லபுரம் வரவிருக்கும் நிலையில், அவர்களை வரவேற்கும் விதத்தில் 14 இடங்களில் பேனர்கள் வைக்க சென்னை உயர்நீதிமன்றத்திடம் தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேனர் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் பிரதமர் மோடி முன்னோடியாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “சுபஸ்ரீயின் மரணத்திற்கு நியாயம் வேண்டி தமிழர்கள் போராடி வரும் நிலையில், உங்களுக்காக பேனர் வைப்பதற்கு தமிழக அரசு நீதிமன்றத்தின் அனுமதியை நாடியுள்ளது” என்று பிரதமரின் அலுவலக டுவிட்டர் கணக்கை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

மேலும் இன்னொரு டுவிட்டர் பதிவில், “இந்த இடையூறு பேனர் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படியை எடுத்து வைப்பதில் நீங்கள் ஒரு முன்னோடியாக செயல்பட்டால், அது தமிழர்களின் உணர்வுகள் மீதான உங்கள் அக்கறையை பிரதிபலிக்கும். மேலும் அதுவே உங்களுக்கு மிகப் பெரிய விளம்பரமாக அமையும். ஜெய் ஹிந்த்!” என்று பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News