செய்திகள்
கோப்புப்படம்

அயோத்தியில் ராமர்கோவில் கட்டி முடிக்க ரூ.1,100 கோடி செலவு பிடிக்கும் - அறக்கட்டளை தகவல்

Published On 2021-01-24 23:55 GMT   |   Update On 2021-01-24 23:55 GMT
அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்க மொத்தம் ரூ.1,100 கோடிக்கு அதிகமாக செலவாகும், 3 ஆண்டுகளில் பணி முடியும் என்று அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை:

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி அடிக்கல் நாட்டினார்.

இந்த கோவில் கட்டுமான பணிக்கு பல்வேறு தரப்பினரும் நிதியை வாரி வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் ராம ஜென்மபூமி தீரத் ஷேத்ரா நியாஸ் அறக்கட்டளையின் பொருளாளரான சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகராஜ், மராத்தி டி.வி. சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அயோத்தியில் பிரதான கோவில் மூன்று அல்லது மூன்றரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும். இதற்கு ரூ.300 கோடி முதல் ரூ.400 வரையில் ஆகும். மொத்தம் உள்ள 70 ஏக்கர் நிலப்பரப்பில் வளர்ச்சிப்பணிகள் செய்து முடிக்க மொத்தம் ரூ.1,100 கோடிக்கு அதிகமாக செலவாகும்.

ராமர் கோவில் கட்டுமான திட்டத்தில் தொடர்புடைய நிபுணர்களை கலந்து ஆலோசித்தபிறகுதான் இந்த செலவின புள்ளி விவரங்களுக்கு வர முடிந்தது.

கோவில் கட்டுமான பணிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்தவர்களிடம் இருந்து நிதி திரட்டுவது எங்களுக்கு சாத்தியம்தான். இதுதொடர்பாக சில கார்ப்பரேட் குடும்பத்தினர் எங்களை அணுகினார்கள். அவர்கள் கோவில் வடிவமைப்புகளை எங்களிடம் தாருங்கள், நாங்கள் கோவில் கட்டும் திட்டத்தை முடித்து தருகிறோம் என்று உறுதி அளித்தார்கள்.

ஆனால் நான் அந்த கோரிக்கையை தாழ்மையுடன் மறுத்து விட்டேன்.

ராமர் கோவில் நன்கொடை திரட்டும் இயக்கமே, 2024-ம் ஆண்டின் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ.க. மேற்கொள்ளும் பிரசாரம் என்று ஒரு கருத்து எழுந்திருப்பதாக சொல்கிறீர்கள்.

நாம் என்ன நிற கண்ணாடி அணிந்து கொண்டு பார்க்கிறோமோ, அந்த நிறத்தில்தான் காட்சி தெரியும். நாங்கள் கண்ணாடி எதுவும் அணியவில்லை. எங்கள் கண்கள், பக்தி பாதையை நோக்கியே இருக்கின்றன.

எங்களது இலக்கு, ராமர் கோவில் கட்டுமான நிதிக்காக ஆறரை லட்சம் கிராமங்களையும், 15 கோடி வீடுகளையும் அடைவதுதான்.

மராட்டிய முதல்- மந்திரி உத்தவ் தாக்கரே கோவில் கட்டுமானத்துக்கு நிதி அளிக்க தயார் என்றால், நான் மும்பையில் உள்ள அவரது மாதோஸ்ரீ இல்லத்துக்கு சென்று பெறுவதற்கு தயாராக இருக்கிறேன்.

சிவசேனா மூத்த தலைவரும், மராட்டிய மேல்சபை துணைத்தலைவருமான நீலம் கார்ஹே 1 கிலோ வெள்ளி செங்கல் வழங்கி உள்ளார்.

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி கேட்டு செல்வீர்களா என்றால், அவர்கள் இல்லத்தில் எங்களுக்கு அவமரியாதை நேராது என்பதற்கு யாரேனும் உத்தரவாதம் அளித்தால் நான் செல்வதற்கு தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகராஜ், கடந்த வாரம் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்றிருந்ததும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்காக அவரிடம் ரூ.5 லட்சத்து 100 நன்கொடை வழங்கியதும் நினைவுகூரத்தக்கது.
Tags:    

Similar News