செய்திகள்
டாஸ்மாக் கடைகள் 14-ந்தேதி வரை மூடப்பட்டுதான் இருக்கும்

டாஸ்மாக் கடைகள் 14-ந்தேதி வரை மூடப்பட்டுதான் இருக்கும்: மேலாண்மை இயக்குனர் திட்டவட்டம்

Published On 2020-03-30 02:50 GMT   |   Update On 2020-03-30 02:50 GMT
சமூக வலைதளங்களில் வரும் செய்திக்கு மறுப்பு தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், டாஸ்மாக் கடைகள் வருகிற 14-ந்தேதி வரை மூடப்பட்டுதான் இருக்கும் என்று அதன் மேலாண்மை இயக்குனர் கிர்லோ‌‌ஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.
சென்னை :

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர இதர கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறக்க தடைவிதிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்து 299 டாஸ்மாக் கடைகளும் கடந்த 23-ந்தேதி மாலை 6 மணி முதல் மூடப்பட்டன. கடைகள் மூடப்படுவதால் மதுபிரியர்கள் அன்றைய நாளில் முண்டியடித்து சரக்குகளை வாங்கி பதுக்கினர். அன்றைய ஒரு நாள் மட்டும் 6 மணி நேரத்தில் (பிற்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை) ரூ.210 கோடிக்கு மது விற்பனை ஆனது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் கடைகள் வருகிற 31-ந்தேதியில் இருந்து பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை இயங்கும் என்றும், இது அரசு உத்தரவு என்றும், ஏதோ செய்தி தொலைக்காட்சிகளில் வெளியானது போன்ற தகவல்களை பரப்பி வருகின்றனர்.

இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோ‌‌ஷ்குமாரிடம் கேட்டபோது, ‘சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள் முற்றிலும் தவறானது. அரசு அறிவித்துள்ளபடி, டாஸ்மாக் கடைகள் வருகிற 14-ந்தேதி வரை மூடப்பட்டு தான் இருக்கும்’ என்றார்.
Tags:    

Similar News