செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம்

அம்மா உணவகங்களில் மீண்டும் சப்பாத்தி: மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

Published On 2021-10-24 04:27 GMT   |   Update On 2021-10-24 04:27 GMT
அம்மா உணவகங்களில் மீண்டும் சப்பாத்தி வினியோகம் தொடங்க வேண்டும். நிதி நெருக்கடியை காரணம்காட்டி இதனை நிறுத்திவைக்க கூடாது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை நீக்கியது, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியை அங்கிருந்து மாற்ற முயற்சிப்பது, காமராஜர் சாலை மாநில உயர் கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் உருவசிலையை பராமரிக்காத்து என்ற வரிசையில் அம்மா உணவகங்களை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன.

அம்மா உணவகங்களில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சப்பாத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்குப் பதில் இட்லி, தக்காளி சாதம் போன்றவை வழங்கப்பட்டு வருவதாகவும், கோதுமை வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் சப்பாத்தி வழங்கப்படுவதில்லை எனவும், குறைவான விலையில் உணவுகள் வழங்கப்படுவதால் சென்னை மாநகராட்சிக்கு 300 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாகவும், அம்மா உணவகங்களுக்கு கோதுமை வழங்கப்படாததற்கு காரணம் நிதி நெருக்கடிதான் என்றும் தகவல்கள் வருகின்றன. மாநகராட்சி சார்பில் சப்பாத்தி வழங்கப்படுகிறது என்றாலும் உண்மை நிலை வேறாக உள்ளது.

சென்னையிலேயே இந்த நிலைமை என்றால், பிற மாவட்டங்களில் நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருக்கும். இந்த திட்டம் ஏழைகளுக்கான திட்டம். நிதி நெருக்கடியை காரணம் காண்பித்து படிப்படியாக இந்த திட்டத்தை நீர்த்துப் போகச் செய்வது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இந்தத் திட்டம் தொடர வேண்டும், விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பது தான் ஏழை, எளிய மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த திட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசாங்கத்துக்கு இருக்கிறது. எனவே, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்பாத்தி வினியோகத்தை மீண்டும் தொடங்கவும், இந்த திட்டம் தொடர்ந்து சிறப்பாக செயல்படவும் நடவடிக்கை எடுத்து ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் பசிப்பிணியை போக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News