செய்திகள்
ஆம்புலன்ஸ்

வேலூர் அருகே ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது

Published On 2019-10-04 12:09 GMT   |   Update On 2019-10-04 12:09 GMT
வேலூர் அருகே ஓடும் ஆம்புலன்சிலேயே கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்று வருகிறார்கள்.

வேலூர்:

ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார். கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி முனிசித்ரா (வயது 24). இவர் கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அவர் ராணிப்பேட்டை அருகே உள்ள லாலாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முனிசித்ராவுக்கு அறிவிக்கப்பட்ட பிரசவ தேதி கடந்தது. இதனால் அவரை மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி அவரை லாலாபேட்டையில் இருந்து நேற்று அதிகாலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். ஆம்புலன்சை டிரைவர் பிரசன்னராஜ் ஓட்டினார். மருத்துவ உதவியாளராக ரீனா இருந்தார்.

பாகாயம் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது முனிசித்ராவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவ உதவியாளர் ரீனா பிரசவ சிகிச்சை மேற்கொண்டார். அதிகாலை 2.30 மணி அளவில் முனிசித்ராவுக்கு ஓடும் ஆம்புலன்சிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து தாயும், சேயும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பிரிவில் அனுதிக்கப்பட்டனர். அங்கு குழந்தைக்கும், தாய்க்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News