செய்திகள்
லஞ்சம்

லஞ்சம் மலிந்த நாடுகளில் இந்தியாவுக்கு 82-வது இடம்

Published On 2021-11-17 23:28 GMT   |   Update On 2021-11-18 01:32 GMT
தொழில் செய்வதற்கு லஞ்சம் மலிந்த நாடுகளில் இந்தியா 82-வது இடத்தை பிடித்து இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:

லஞ்ச-ஊழலுக்கு எதிரான ‘டிரேஸ்’ என்ற அமைப்பு, உலக அளவில் தொழில் செய்வதற்கு லஞ்சம் மலிந்த நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் வரிசைப்படுத்தி வெளியிட்டு வருகிறது.

அரசுடனான வணிக தொடர்புகள், லஞ்சத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் அமலாக்கம், அரசு மற்றும் சிவில் சேவையில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஊடகங்களின் பங்கை உள்ளடக்கிய சிவில் சமூக மேற்பார்வைக்கான திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

அந்தவகையில் நடப்பு ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. 194 நாடுகளை கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 44 புள்ளிகளுடன் 82-வது இடத்தை பிடித்து உள்ளது.

வனாட்டு தீவுகள், பெரு, மாசிடோனியா, மாண்டிநீக்ரோ போன்ற நாடுகளும் இந்தியாவைப்போலவே 44 புள்ளிகள் பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டு 45 புள்ளிகளுடன் 77-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் பாகிஸ்தான், சீனா, நேபாளம், வங்காளதேசம் போன்ற அண்டை நாடுகளைவிட இந்தியா சிறப்பான நிலையில் உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்த ஆண்டுக்கான பட்டியலில் வடகொரியா, துர்க்மெனிஸ்தான், வெனிசூலா மற்றும் எரித்ரியா போன்ற நாடுகள் அதிக லஞ்ச ஆபத்து நிறைந்த நாடுகளாகவும், டென்மார்க், நார்வே, பின்லாந்து, சுவீடன், நியூசிலாந்து போன்ற நாடுகள் லஞ்ச ஆபத்து குறைந்த நாடுகளாகவும் அறியப்படுகின்றன.

அமெரிக்காவை பொறுத்தவரை கடந்த ஐந்து ஆண்டுகளில், உலகளாவிய போக்குகளுடன் ஒப்பிடும் போது, அங்கு வணிக லஞ்சம் ஆபத்து சூழல் கணிசமாக மோசமடைந்திருப்பதாக கூறியுள்ள டிரேஸ் அமைப்பு, அனைத்து வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளிலும் வணிகம் செய்வதற்கான லஞ்ச அபாயம் அதிகரித்திருப்பதகவும் குறிப்பிட்டு உள்ளது.

Tags:    

Similar News