செய்திகள்
களக்காட்டில் நடந்த பிரசாரத்தில் நல்லகண்ணு பேசிய காட்சி.

பா.ஜ.க. சொல்வதை தமிழகத்தில் செயல்படுத்துகின்றனர்- நல்லக்கண்ணு பேச்சு

Published On 2019-10-17 10:42 GMT   |   Update On 2019-10-17 10:42 GMT
மத்தியில் பாரதிய ஜனதா என்ன சொல்கிறார்களோ அதை தமிழகத்தில் அப்படியே செயல்படுத்துகிறார்கள் என்று நல்லக்கண்ணு பேசியுள்ளார்.

களக்காடு:

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு களக்காட்டில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நாங்குநேரி தொகுதிக்கு அமைச்சர்கள் அனைவரும் வந்துள்ளனர். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் எல்லாரும் இங்கு வந்துவிட்டனர். பணத்தை வைத்து தான் தேர்தல் என்ற நிலை வந்துவிட்டது. கோடீஸ்வரர்கள் தான் தேர்தலில் நிற்க வேண்டும் என்றால் என்ன ஜனநாயகம் உள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு தினசரி மூன்று கோடி லிட்டர் தண்ணீர் வழங்கினர். விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை. குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. ஆனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு மட்டும் தண்ணீர் வழங்கினார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேரை சுட்டுக் கொன்றதும் அ.தி.மு.க. ஆட்சியில் தான்.

குடிமராமத்து பணி என்ற பெயரில் குளங்களை கொள்ளையடிக்கிறார்கள். இந்த ஆட்சியில் விவசாயிகளைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. மத்தியில் பாரதிய ஜனதா என்ன சொல்கிறார்களோ அதை தமிழகத்தில் அப்படியே செயல்படுத்துகிறார்கள். நீட் தேர்வை ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால் இப்போது நீட்தேர்வு வந்துவிட்டது.

பெருந்தலைவர் காமராஜர் இலவச கல்வியை கொடுத்தார். அதுவும் தனியார் மயம் ஆகிவிட்டது. கல்வி, ரெயில், விமானம் எல்லாம் தனியார் மயம் ஆகிறது. மதவெறி சக்தியை வெற்றிபெற விடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News