செய்திகள்
சுனில் அரோரா

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் 10-ந் தேதி சென்னை வருகை - 2 நாட்கள் தங்கி இருந்து ஆலோசனை

Published On 2021-02-04 21:51 GMT   |   Update On 2021-02-04 21:51 GMT
சட்டமன்ற தேர்தல் ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் சுனில் அரோரா சென்னைக்கு வருகை தர உள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் ஏப்ரல் இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் பற்றி ஆய்வு செய்ய ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையில் உயர்மட்டக் குழு அதிகாரிகள் குழு கடந்த டிசம்பர் 22, 23-ந் தேதிகளில் சென்னைக்கு வந்திருந்தனர்.

அப்போது மாநில அரசு அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை வங்கி அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து, தேர்தலை சுதந்திரமாக நடத்துவது குறித்து ஆலோசனைகளையும், கருத்துகளையும் கேட்டறிந்தனர்.

இந்த நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் குழு 10 மற்றும் 11-ந் தேதிகளில் சென்னைக்கு வருகின்றனர். தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஆயத்தப் பணிகள் குறித்தும் அவர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள்.

முதலில் அவர்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பேசுவார்கள். அதைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோருடன் அந்தந்த தொகுதிகளில் உள்ள தேர்தல் ஆயத்த நிலை குறித்து ஆய்வு செய்வார்கள்.

அதன் பின்னர், அமலாக்கத் துறை முகமைகள், தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் மூத்த அதிகாரிகள் குழு ஆகியோரையும் சந்தித்து ஆலோசனை மேற்கொள்வார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News