செய்திகள்
கல்லார்-அடர்லி இடையே மலைரெயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்து கிடக்கும் காட்சி.

குன்னூரில் பலத்த மழை- தண்டவாளத்தில் பாறை விழுந்ததால் நடு வழியில் நின்ற மலை ரெயில்

Published On 2019-11-12 10:49 GMT   |   Update On 2019-11-12 10:49 GMT
குன்னூர் பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்த பலத்த மழையால் தண்டவாளத்தில் பாறை விழுந்தது. இதில் மலை ரெயில் நடு வழியில் நின்றதால் பாறைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

மேட்டுப்பாளையம்:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் தொடர் மழை பெய்தது. பின்னர் சற்று ஓய்ந்து காணப்பட்டது. இந்த நிலையில் குன்னூர் பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

தினமும் அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் மழை காலை 8 மணி வரை நீடிக்கிறது. பின்னர் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது வெயிலும் அடித்து வருகிறது.

குன்னூர் மற்றும் அதனை சுற்றி உள்ள வண்டி சோலை, வெலிங்டன், அரவங்காடு, காட்டேரி, பர்லியார், கொலக்கம்மை, தூதூர் மட்டம், எடப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று காலை 3-வது நாளாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் குளிர்ந்த காற்று வீசுவதால் பெரும்பாலான பொதுமக்கள் கம்பளி சுவெட்டர் அணிந்தவாறு வெளியில் சென்றனர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தினமும் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டு செல்லும். அதே போல் இன்று காலை 200-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் மலை ரெயில் புறப்பட்டு சென்றது.

காலை 7.20 மணிக்கு இந்த ரெயில் கல்லார் ரெயில் நிலையத்தை அடைந்தது. அங்கு என்ஜினுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டது. அங்கிருந்து 7.35 மணிக்கு புறப்பட்டு சென்றது. 8.10 மணிக்கு அடர்லி ரெயில் நிலையத்திற்கு சென்றது.

குன்னூரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக கல்லார்- அடர்லி ரெயில் நிலையங்களுக்கு இடையே சிறிய மற்றும் பெரிய பாறைகள் மலை ரெயில் பாதையில் உருண்டு விழுந்து கிடந்தது. இதனால் மலை ரெயிலை மேற்கொண்டு இயக்க முடியவில்லை.

இதனை தொடர்ந்து அடர்லி ரெயில் நிலையத்திலிருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்ட மலை ரெயில் 9.15 மணிக்கு கல்லார் ரெயில் நிலையத்திற்கு திரும்பி வந்தது.

அதில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் 3 பஸ்களில் குன்னூர் மற்றும் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மலை ரெயில் பாதையில் உருண்டு விழுந்த பாறைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்பட்டது. மலை ரெயில் பாதையில் உருண்டு விழுந்த பாறைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

ஊட்டியிலும் இன்று காலை லேசான சாரல் மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

ஊட்டி-1.2, நடுவட்டம்-4, கிளன்மார்கன்- 1, கல்லட்டி- 2, குந்தா-3, அவலாஞ்சி-3, கெத்தை-14, எமரால்டு-3, கின்னகொரை-11, அப்பர் பவானி- 5, குன்னூர்-17,பர்லியார்-56, கேத்தி-4, கோத்தகிரி-18.6, கொடநாடு-16. 

Tags:    

Similar News