செய்திகள்
கோப்புபடம்

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் படுகொலை - 7 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

Published On 2020-09-14 09:20 GMT   |   Update On 2020-09-14 09:20 GMT
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 7 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவை:

கோவை ஆவாரம்பாளையம், தனலட்சுமி நகரை சேர்ந்தவர் பிஜு (வயது 37). இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். பிஜு, ராம்நகர் பகுதியில் கடை நடத்தி வந்தார். மேலும் வட்டிக்கும் பணம் கொடுத்து வசூலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்து முன்னணி அமைப்பின் பிரமுகரான இவர், அந்த பகுதியில் சில பிரச்சினைகளில் தலையிட்டு வந்ததாக தெரிகிறது.

நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் உறுப்பினரான ஆறுமுகம் என்பவர் காந்திபுரம் பகுதியில் பெல்ட் கடை நடத்தி வருகிறார். ஆறுமுகத்தின் மகன் நிதீஷ்குமார் (20). இவரது தரப்பினருக்கும், ராம்நகர் பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. அதன் காரணமாக கடந்த ஜூலை மாதம் இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை நிதீஷ்குமார் தனது நண்பர் கணேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். இதை பார்த்த ராம்நகரை சேர்ந்த ராகுல் (23), விஷ்ணு (25) ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்றனர். அவர்கள், சிவானந்தாகாலனி ரோட்டில் உள்ள கார் ஷோரூம் அருகே நிதீஷ்குமாரின் மோட்டார் சைக்கிளை மறித்து கத்தியால் சரமாரியாக குத்தினர். உடனே கணேஷ் அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ராகுல், விஷ்ணு ஆகியோரை தேடி வந்தனர். காயமடைந்த நிதீஷ்குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிதீஷ்குமார் படுகாயம் அடைந்ததால் ஆத்திரம் நண்பர்கள், கத்தியால் குத்திய நபர்களை பழிக்குபழி வாங்க திட்டமிட்டு காத்திருந்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் இந்து முன்னணி ஆதரவாளரான பிஜு தலையிட்டு தனது பகுதியை சேர்ந்த நபர்களுக்கு ஆதரவாக செயல் பட்டதாக கூறப்படுகிறது. எனவே பிஜு இருக்கும் வரை தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கருதிய, நிதீஷ்குமாரின் கூட்டாளிகள் அவரை கொலை செய்ய திட்டமிட்டனர்.

அதன்படி நேற்று பகல் 12.30 மணியளவில் ராம்நகரில் கடை முன்பு நின்ற பிஜுவை, மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கும்பல் திடீரென்று சுற்றி வளைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிஜு அவர்களிடம் இருந்து தப்பிக்க வேகமாக ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் அவரை துரத்தி சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிஜுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.

பிஜுவிடம் ஒரு கும்பல் வாக்குவாதம் செய்து அரிவாளால் வெட்டும் காட்சி, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையே பிஜுவுக்கு ஆதரவாக இந்து முன்னணியினர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது, கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று இந்து முன்னணியினர் வலியுறுத்தினர்.

அதைத்தொடர்ந்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் ஸ்டாலின் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள், கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த கொலை குறித்து போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் கூறும்போது, இந்த கொலை முன்விரோதத்தில் நடந்துள்ளது. எந்த அமைப் புகளுக்கும் தொடர்பு இல்லை. கொலையாளிகளை விரைவில் பிடிப்போம் என்றார். இது குறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நிதீஷ்குமாரின் தந்தை ஆறுமுகம் உள்பட சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட பிஜுவின் மனைவி சரண்யா, கணவர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். கதறி துடித்தபடியே தலையை சுவற்றில் மோதி, மோதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் காயம் அடைந்த அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்து முன்னணி பிரமுகர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News