செய்திகள்
அதிமுக

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 14-ந்தேதி நடக்கிறது- போலீஸ் அனுமதி கேட்டு டி.ஜி.பி.யிடம் மனு

Published On 2021-06-10 03:08 GMT   |   Update On 2021-06-10 03:08 GMT
கட்சியின் கட்டுப்பாட்டை யார் மீறினாலும் அது தவறுதான். இந்த போஸ்டர் விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கலந்தாலோசிப்பார்கள்.
சென்னை:

சென்னையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வந்தார். அங்கு டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதியை சந்தித்து, வருகிற 14-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கான போலீஸ் அனுமதி வேண்டி மனு அளித்தார்.

அதனைத்தொடர்ந்து ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்துவதற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு வேண்டி போலீஸ் டி.ஜி.பி.யிடம் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம். கொரோனா தாக்கல் இருக்கும் சூழ்நிலையில், முழுமையான சட்டவிதிகளையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைபிடித்து இந்த கூட்டம் நடைபெறும் என்று கோரிக்கை மனுவில் உத்தரவாதம் அளித்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அ.தி.மு.க. கூட்டங்களில் தொடர்ந்து சலசலப்பு ஏற்பட்டு வருகிறதே?

பதில்:- எந்த சலசலப்பும், பரப்பும் இல்லை. ஏற்கனவே நடந்த ஒரு கூட்டத்திலும் இப்படித்தான் பேசப்பட்டது. ஆனால் அந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதேபோலவே வருகிற 14-ந்தேதி நடைபெறும் கூட்டத்திலும் அ.தி.மு.க.வின் சட்டமன்ற நிர்வாகிகளும் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார்கள். எனவே எங்களுக்குள் எந்த பிரச்சினையும் கிடையாது.

கேள்வி:- ஓ.பன்னீர்செல்வத்தை கலந்தாலோசிக்காமல் ஏதாவது முடிவு எடுக்கப்பட்டால் கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று நெல்லையில் அ.தி.மு.க.வினர் பரபரப்பு நோட்டீசு ஒட்டியுள்ளார்களே?

பதில்:- கட்சியின் கட்டுப்பாட்டை யார் மீறினாலும் அது தவறுதான். இந்த போஸ்டர் விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கலந்தாலோசிப்பார்கள். இது ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் விஷயமாக இருந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க. ராணுவ கட்டுப்பாடுடன் இயங்கும் கட்சி. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை நல்லபடியாக வழிநடத்தி வருகிறார்கள். எனவே தி.மு.க. உள்பட கட்சிகள் நம்மை விமர்சித்து பேசுவதற்கு இடம் தரக்கூடாது. அதுதான் நமது எண்ணமாக இருக்கவேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும் இந்த சூழலில் மக்களுக்கு ஆக்கப்பூர்வமான பணிகளை செய்வதுடன், ஆளும்கட்சியின் குற்றம்-குறைகளையும் எடுத்து சொல்லி தொடர்ந்து மக்கள் பணியாற்றுவதே அ.தி.மு.க. தொண்டர்களின் எண்ணமாக இருக்கவேண்டும். இதைத்தான் உண்மையான அ.தி.மு.க.வினர் செய்வார்கள்.

கேள்வி:- கட்சியை வழிநடத்துவேன், விரைவில் வருவேன் என்றெல்லாம் சசிகலா பேசும் ஆடியோ பதிவுகள் வெளியாகி கொண்டிருக்கிறதே?

பதில்:- அ.தி.மு.க.வில் சசிகலா வருவதற்கு 100 சதவீதம் வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டார். கே.பி.முனுசாமியும் ‘அ.தி.மு.க.வுக்கும், சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’, என்று தெளிவாக கூறிவிட்டார். எனவே நேற்றும் சரி, இன்றும் சரி, நாளையும் சரி... ஒரே நிலைதான். அ.தி.மு.க.வில் சசிகலா இல்லை என்ற நிலைதான் என்றும் தொடரும்.

கேள்வி:- அ.தி.மு.க.வுக்கு பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவாரா?

பதில்:- உறுதியாக இல்லை. 100 சதவீதம் இல்லை. அ.தி.மு.க.வின் ஒரே பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டுமே.

மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்துவதற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு வேண்டி, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடமும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்து சென்றார்.
Tags:    

Similar News