செய்திகள்
கோப்பு படம்

ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி வாக்காளர் பட்டியலில் குளறுபடி - பொதுமக்கள் அதிருப்தி

Published On 2019-10-21 16:50 GMT   |   Update On 2019-10-21 16:50 GMT
ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி வாக்காளர் பட்டியல் குளறுபடியாக உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம்:

ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் சில வார்டுகளில் 500-க்கும் குறைவான வாக்காளர்கள் உள்ளனர். ஒரு வார்டில் 800-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு வார்டில் உள்ள சில தெருக்களை மற்றொரு வார்டுடன் இணைத்து புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இவ்வாறு இணைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் எவ்வித கருத்தும் கேட்கப்படவில்லையாம். இதனால் ஒரு சில வார்டில் உள்ள வாக்காளர்கள் பெயர்கள் சம்பந்தமில்லாத வார்டுகளில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஒரே தெருவில் உள்ள பல வீடுகளையும், ஒரு வீட்டில் உள்ள வாக்காளர்களில் கணவன், மனைவியை ஒரு வார்டிலும், பிள்ளைகளை மற்றொரு வார்டிலும் பெயர் சேர்த்துள்ளனர்.

இதனால் பொதுமக்கள் வசிக்கும் பகுதி ஓரிடமாகவும், வாக்களிக்கும் பகுதி வேறு இடமுமாக உள்ளது. இதன் காரணமாக தங்கள் பகுதியை சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வாக்களிப்பதால் வெற்றி பெறும் கவுன்சிலரிடம் தங்களது குறைகளை தெரிவிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த குளறுபடிகள் குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித பயனுமில்லை. தொண்டி பேரூராட்சி செயல் அலுவலரே ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் மண்டபம் ஆகிய பேரூராட்சிகளுக்கும் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரே நபர் 3 பேரூராட்சிகளை கவனிப்பதில் சிரமம் இருந்து வருவதால் அலுவலக பணியாளர்கள் தான் வாக்காளர் பட்டியல் பணிகளை கையாளுகின்றனர்.

செல்வாக்கு பெற்ற நபர்களின் அழுத்தம் காரணமாக அவர்களுக்கு சாதகமாக இத்தகைய குளறுபடிகள் ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக அந்தந்த வார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களை அதே பகுதியில் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News