செய்திகள்
கோப்பு படம்

போலீஸ் நிலையங்களில் கைதிகள் பலி - தமிழகம் 2-வது இடம்

Published On 2020-01-13 06:50 GMT   |   Update On 2020-01-13 06:50 GMT
போலீஸ் நிலையத்தில் கைதிகள் இறப்பதில் இந்திய அளவில் குஜராத் முதல் இடமும், தமிழ்நாடு 2-வது இடமும் பிடித்துள்ளது.
சென்னை:

தேசிய குற்றப்பிரிவு ஆவணம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதில், போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படும் விசாரணை கைதிகளின் பலி அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிப்பதற்காக குற்றவாளிகளை போலீசார் அழைத்துச் செல்கிறார்கள்.

அவர்களில் சிலர் விசாரணையின்போது போலீஸ் நிலையத்திலேயே இறந்து விடுகின்றனர். சமீபகாலமாக இதுபோன்ற சாவுகள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

2018-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களில், 13 பேர் போலீஸ் நிலையத்திலேயே உயிர் இழந்து இருக்கிறார்கள். இதன்படி இந்திய அளவில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. பல்வேறு சித்ரவதை காரணமாக இவர்கள் இறந்துவிட்டதாக மூத்த வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் 3 சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் நிலையத்தில் கைதிகள் இறப்பதில் தமிழ்நாடு, இந்திய அளவில் 2-வது இடம் பிடித்துள்ளது. தமிழகத்தில், 12 பேர் போலீஸ் விசாரணையின் போது போலீஸ் நிலையத்தில் உயிர் இறந்துள்ளனர்.

இதுதொடர்பாக கோர்ட்டு விசாரணை நடந்துள்ளது என்றாலும் எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எதிர்பாராதவிதமாக இவர்கள் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் நிலையத்தில் விசாரணையின்போது இறந்தவர்களின் குடும்பத்தினரிடம், போலீசார் பேசி சமரசம் செய்து விடுவதால் இந்த சம்பவங்களில் மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மூத்த வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் அவர்கூறும் போது, ‘குற்றவாளி என்று ஒருவர் மீது சந்தேகப்படுவதால் குறிப்பிட்ட நபரை போலீசார் அழைத்துச் சென்று விசாரிக்கிறார்கள். இது தவிர பணம் பெற்றுக்கொண்டு முறைகேடாகவும் சிலரை போலீசார் அழைத்துச் சென்று சித்ரவதை செய்வதால், அவர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

அவர்களை போலீசார் வரம்பு மீறி அடித்து உதைப்பதால் இது போன்ற விபரீதங்கள் ஏற்படுகின்றன’ என்றார்.
Tags:    

Similar News