செய்திகள்
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.

சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.1 1/2 லட்சம் சிக்கியது

Published On 2019-10-04 12:39 GMT   |   Update On 2019-10-04 12:39 GMT
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் ரூ.1 1/2 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களாக வேல்முருகன் (கிராமஊராட்சி), வீராங்கன் ஆகியோர் உள்ளனர். இவர்களது தலைமையில் 50 கிராமங்களில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக கிராம ஊராட்சிகளில் நடைபெறும் சாலைபணி, குடிநீர் பணி, அம்மா சிமெண்டு வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ்சூப்பிரண்டு மெல்வின் ராஜாசிங் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், மாலா மற்றும் போலீசார் சின்னசேலம்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு விரைந்தனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவதை அறிந்ததும் அலுவலக ஊழியர்கள் 500 ரூபாய் நோட்டு கட்டு ஒன்றை ஜன்னல் வழியாக வெளியே  வீசினர். இதனை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். புதரில் வீசப்பட்ட ரூ. 45 ஆயிரத்தை சேகரித்தனர்.

இதேபோல அங்கு உள்ள சிமெண்டு விற்பனைபிரிவு அலுவலகத்திலும் ஊழியர்கள் ரூபாய் நோட்டுகளை தூக்கி வெளியே வீச முயன்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக தடுத்து அதனை கைப்பற்றினர். அதன்பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அலுவலகத்தில் 25-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர்களை வரவழைத்து  அவர்களிடம் தனித்தனியே போலீசார் விசாரணை நடத்தினர்.   

இரவு 10.30 மணி வரை சோதனை நீடித்து இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 150 ரொக்கப்பணம், முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். இந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News