ஆன்மிகம்
சிவன்

மகா சிவராத்திரி சிவாலய ஓட்டம்: விரதத்தை தொடங்கிய பக்தர்கள்

Published On 2021-03-06 06:12 GMT   |   Update On 2021-03-06 06:12 GMT
சிவன் ஓடிய ஓட்டத்தை நினைவு கூறும் வகையில்தான் சிவாலய ஓட்டம் நடப்பதாக வரலாறு கூறுகிறது. சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் விரதத்தை தொடங்கினர்.
சிவாலய ஓட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்பதற்கு சரியான காரணம் தெரியவில்லை. இருப்பினும் இரு விதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. அவற்றில் மூன்று தத்துவங்களை நிலைப்படுத்தும் பீமன் கதை தான் ஏராளமான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. பாண்டவர்களின் முதல்வரான தர்மனுக்கு ராஜகுரு யாகம் ஒன்றை நிறைவேற்ற புருஷ மிருகத்தின் (வியாக்கிரபாத மகரிஷி) பால் தேவைப்பட்டது. அந்த ராட்சத மிருகத்துக்கு சிவன் மீது மிகுந்த பக்தியும், விஷ்ணு மீது மிகுந்த வெறுப்பும் உண்டு.

பீமனின் அகந்தையை அடக்க வியாக்கிரபாத மகரிஷிக்கு சிவனும், விஷ்ணுவும் ஒன்று என பாடம் புகட்ட நினைத்தார். மகாவிஷ்ணு. பீமனிடம் பால் கொண்டுவர கட்டளையிட்டார். அத்துடன் 12 உத்திராட்சங்களையும் பீமனின் கையில் கொடுத்து, உனக்கு ஏதாவது ஆபத்து வந்தால் இதில் ஒன்றைக் கீழே போட்டு விடு என்று சொல்லி அனுப்பி வைத்தார். பீமன் தயக்கத்துடன் ருத்ராட்சங்களை வாங்கிக் கொண்டு புறப்பட்டான். பீமன் அடர்ந்த காட்டை அடையும் போது அங்கு புருஷ மிருகம் கடும் தவத்தில் இருந்தது. அப்போது பீமன் "கோவிந்தா, கோபாலா" என குரல் எழுப்பியபடி பால் பெற முயற்சி செய்தான். கோவிந்தா என்ற வார்த்தையை கேட்டவுடன் புருஷ மிருகத்துக்கு சிவலிங்கம் விஷ்ணுவாக தெரிய தவம் கலைந்து விடுகிறது. சிவபூஜையில் புகுந்த பீமனை புருஷ மிருகம் கோபத்துடன் துரத்தி சென்று பிடித்து கொண்டது. உடனே பீமன் உத்திராட்சத்தை அந்த இடத்தில் போட்டான். உடனே அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் உருவாகியது. புருஷ மிருகம் ஆழ்ந்த சிவநெறி செல்வர் என்பதால் லிங்க பூஜையை தொடங்கி விடுகிறது.

சிறிது நேரம் கழித்து மீண்டும் "கோவிந்தா, கோபாலா" என குரலெழுப்பி பால் பெற முயன்றபோது புருஷமிருகம் மீண்டும் துரத்தி சென்று பற்றிக்கொள்ள, அடுத்த உத்திராட்சத்தை அங்கு போட்டு ஓடி விட்டான். இவ்வாறு 12 உத்திராட்சங்களும் 12 சைவ தலங்களாக உருவாகி விடுகின்றது.

பன்னிரண்டாவது உத்திராட்சம் போடும்போது பீமனின் ஒருகால் வியாக்கிரபாத மகரிஷிக்கு சொந்தமான இடத்திலும், மறுகால் வெளியிலும் இருந்தது. உடனே பீமன் அதனுடன் வாதம் செய்தான். இந்த வழக்கில் நீதி தேவனான தரும புத்திரன் தனது தம்பி என்றும் பாராமல் புருஷ மிருகத்துக்கு சாதகமாக நீதி வழங்கினார். பீமனுடைய உடலில் பாதி புருஷ மிருகத்துக்கு சொந்தம் என அறிவிக்கிறார். இறுதியாக யாகம் நிறை வேற புருஷமிருகம் பால் வழங்குகிறது. பீமனுடைய கர்வம் ஒடுக்கப்பட்டது. புருஷ மிருகத்தின் மீது இருந்த அவதூறுகளும் களையப்படுகிறது. இதை நினைவு கூறும் வகையில் இன்று பக்தர்கள் கோவில் களுக்கு ஓடிச்சென்று வழிபடுகிறார்கள்.

மற்றொரு கதை

சுண்டோதரன் என்ற அரக்கன் சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டவனாக இருந்தான். அவன் சிவனை வேண்டி திருமலையில் (முதல் சிவாலயம்) கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவன் அரக்கன் முன் தோன்றி வேண்டிய வரம் தருவதாக கூறினார். உடனே அந்த அரக்கன் நான் யாருடைய தலையை தொட்டாலும் அவன் சாம்பலாகி விடவேண்டும் என்ற வரத்தை கேட்டான். சிவனும் அந்த வரத்தை கொடுத்தார்.

உடனே அரக்கன் வரம் உண்மையிலேயே தனக்கு தரப்பட்டதா என்பதை அறிய சிவனின் தலையை தொட முயன்றான். உடனே சிவன் அங்கிருந்து "கோபாலா, கோவிந்தா" என்று அழைத்துவாறு ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிகிறார். இறுதியில் நட்டாலத்தில் விஷ்ணு மோகினி அவதாரம் எடுக்கிறார். மோகினியின் அழகில் மயங்கிய அவன் கையால் அவனது தலையை தொட செய்து அழிக்கிறார் விஷ்ணு.

இவ்வாறு சிவன் ஓடி ஒளிந்த 12 இடங்களில் சிவன் கோவில் எழுப்பப்பட்டதாகவும், நட்டாலத்தில் சிவனை விஷ்ணு காத்ததால் அங்கு இருவருக்கும் கோவில் எழுப்பப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு சிவன் ஓடிய ஓட்டத்தை நினைவு கூறும் வகையில்தான் சிவாலய ஓட்டம் நடப்பதாக வரலாறு கூறுகிறது.
Tags:    

Similar News