லைஃப்ஸ்டைல்
நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் வருவதற்கு இவை தான் காரணம்

Published On 2020-12-27 04:30 GMT   |   Update On 2020-12-26 05:56 GMT
இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராக சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாததுதான் நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படை காரணம்.
நீரிழிவு நோய் வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராக சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாததுதான் நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படை காரணம். இன்சுலின் சுரப்பை தடுப்பதற்கென பொதுவான அம்சங்கள் சில இருக்கின்றன. நீரிழிவு நோய் உருவாவதற்கு முன்பே இவை நம் உடலில் காணப்படுகின்றன.

பின்னொரு நாளில் நீரிழிவு நோய் வருவதை தூண்டுகின்றன. இவற்றை ‘சர்க்கரை நோயின் முன்காரணிகள்’ என்கிறோம். இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தாலே போதும், நீரிழிவு நோய் வரலாம்.

நீரிழிவு நோயை ஏற்படுத்தும் காரணிகளில் மிக முக்கியமானது, குடும்பப் பாரம்பரியம். பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், வாரிசுகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. நம் உடலில் ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. இவற்றில்தான் மரபணுக்கள் உள்ளன. இவைதான் செல்கள் எப்படி உருவாக வேண்டும், எப்போது உருவாக வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என கற்றுத் தருகின்றன.

உதாரணமாக, ஆரோக்கியமாக உள்ள ஒருவரின் கணையத்தில் பீட்டா செல்கள் எப்போது, எவ்வளவு இன்சுலினைச் சுரக்க வேண்டும் என்பதனை இந்த மரபணுக்கள்தான் கற்றுத்தரும். அதன்படி அந்த செல்கள் இன்சுலினைச் சுரந்து, ரத்தச் சர்க்கரையை சரியான அளவில் வைத்துக்கொள்ளும்.

புத்தகங்களை அச்சிடும்போது சில பிழைகள் ஏற்படுவதைப்போல, சிலருக்கு இந்த மரபணுக்கள் உருவாகும்போது பிழைகள் ஏற்பட்டுவிடும். அப்போது, உடலில் நடைபெற வேண்டிய இயல்பான பணிகள் நடைபெறாது. உதாரணமாக, இன்சுலினைச் சுரக்கச் செய்கின்ற மரபணுவில் பிழை உண்டானால், இன்சுலின் சுரப்பதில் சிக்கல் ஏற்படும். நீரிழிவு நோய் வந்துவிடும். இந்த மரபணுக்கள் பெற்றோரிடம் இருந்து இவர்களுக்கு வந்திருக்கும். இனி, இவர்கள் வாரிசுகளுக்கு அவை கடத்தப்படும். அப்போது, அவர்களுக்கும் நீரிழிவு நோய் வரும். இவ்வாறு, அந்த பரம்பரையின் வம்சாவளியில் வருபவர்களுக்கு நீரிழிவு நோய் கடத்தப்படுகிறது.

சர்க்கரை நோயை வரவேற்கும் அடுத்த காரணி, உடல் பருமன். இனிப்புப் பண்டங்களையும் கொழுப்பு உணவுகளையும் அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலினின் தேவையும் அதிகரிக்கும். அதற்கேற்ப கணையம் அதிகமாக இன்சுலினைச் சுரந்து சுரந்து சீக்கிரத்தில் களைத்துப் போகிறது. இதனால், இவர்களுக்கு நீரிழிவு நோய் சீக்கிரத்தில் வந்துவிடுகிறது. உடல் பருமன் உள்ளவர்களில் 100-ல் 80 பேருக்கு இப்படித்தான் நீரிழிவு நோய் வருகிறது.

உடல் திசுக்களில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேரும்போது செல்களின் இயல்புத் தன்மை மாறுகிறது. இதனால், செல்களுக்குள் நுழைவதற்கு இன்சுலின் சிரமப்படுகிறது. அப்படியே சென்றாலும், செல்களில் கொழுப்பு அடைத்துக் கொள்வதால், இன்சுலின் தனது இயல்பான பணியைச் செய்ய முடிவதில்லை. இதன் விளைவாகவும் நீரிழிவு நோய் ஏற்படும்.
Tags:    

Similar News