ஆன்மிகம்
சுவாமி உமாமகேசுவரர், அம்பாள் உமாதேவி

காசிக்கு நிகரான கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோவில்

Published On 2021-03-23 04:05 GMT   |   Update On 2021-03-23 04:05 GMT
சோழப்பேரரசின் பெரும் தேவியாக விளங்கிய செம்பியன்மாதேவியினால் கற்றளியாக திருப்பணி செய்யப்பெற்ற பெருமையும் உடைய சிவத்தலம், திருநல்லம் உமாமகேஸ்வரர் திருக்கோவில்.
பழங்கால சோழ வளநாட்டின் காவிரியின் தென்கரை தலங்களில் தலப் புராண வரலாறும், தேவார பாடல்களும் பெற்ற சிறப்பும் சோழப்பேரரசின் பெரும் தேவியாக விளங்கிய செம்பியன்மாதேவியினால் கற்றளியாக திருப்பணி செய்யப்பெற்ற பெருமையும் உடைய சிவத்தலம், திருநல்லம் உமாமகேஸ்வரர் திருக்கோவில். இக்கோவில் உள்ள ஊர் தற்போது கோனேரிராஜபுரம் என்று அழைக்கப்படுகிறது.

இங்குள்ள இறைவன் உமாமகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். மேலும் இத்தலப் பெருமான், உமாதேவியை திருமணம் செய்து கொண்டு திருமண கோலத்தில் விளங்குவதால் இவரை கல்யாண சுந்தரர் என்றும் அழைக்கிறார்கள். இத்தலத்து இறைவனை பூமிதேவி, பூஜித்து வழிபட்டதால் பூமிநாதர் எனவும், கல்வெட்டுகளில் திருநல்லமுடையார் எனவும் அழைக்கப்படுகிறார்.

இத்தலத்தில் பூமி தேவியால் ஏற்படுத்தி நீராடப்பெற்ற பூமி தீர்த்தமும், பிரம்மனால் ஏற்படுத்தப்பட்ட பிரம்ம தீர்த்தமும், விஸ்வகர்மாவினால் நிர்மாணிக்கப்பட்ட ஞான கூபம் என்னும் கிணறும் உள்ளன. இத்தீர்த்தத்தில் நீராடுவோர் குஷ்டநோயும், பிற பாவங்களும் நீங்கி நலம் பெறுவர் என தலவரலாறு கூறுகிறது. இத்தலத்தின் தல விருட்சம் அரச மரமாகும்.

உமாமகேஸ்வர பெருமானை தேவர்களும், முனிவர்களும், அரசர்களும் வழிபட்டனர். அவர்களில் பூமி தேவிக்கு அசுர பயம் போக்கி அருள் செய்ததும், சந்திரகுலமன்னன் புரூரவசுவின் குஷ்டநோய் போக்கி அருள் செய்ததும், கவுதம முனிவருக்கு ஆனந்த தாண்டவ காட்சி அளித்து அருளியதும் இத்தல பெருமானின் அற்புதங்களாகும்.சோழ மன்னர்கள் வந்து தங்கி திருநல்லமுடையாரை வழிபட்டதால் கோனேரிராஜபுரம் என்ற பெயர் பிற்காலத்தில் ஏற்பட்டதோ எனவும் கருத இடமுண்டு.

திருநல்லத்தின் எட்டு திசைகளிலும் அஷ்டதிக்கு பாலகர்களால் நிறுவி பூஜித்து வழிபட்ட சிவத்தலங்கள் சூழ்ந்துள்ளன. முன்னொரு காலத்தில் பூமிதேவி, துராத்மாவான அசுரனால் பாதாளத்திற்கு கொண்டு செல்லப்பட்டாள். அதை அறிந்த திருமால், வராக உருவம் எடுத்து பாதாளம் சென்று அவளை மீட்டு வந்தார்.

திருமாலை வணங்கிய பூமி தேவியை ஆசீர்வதித்து அவளது பயத்தைப் போக்கி சடாட்சர மந்திர உபதேசம் செய்து நீ, காவிரியின் கரையில் உள்ள அரசு வனத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை பூஜித்து வழிபட்டு அசுர பயம் நிரந்தரமாக நீங்க பெறுவாய் என ஆசீர்வதித்தார். அவ்வண்ணமே பூமிதேவி, காவிரிக்கரையில் உள்ள அரச வனத்தின் கண் அரச மரத்தின் கீழ் லிங்க வடிவில் எழுந்தருளி இருந்த சிவபெருமானை கண்டு மகிழ்ந்து அவ்விடத்தில் கோவில் எடுப்பித்து சிவாகம முறைப்படி பூஜைகள் செய்து வழிபட்டு வந்தாள்.

பூமி தேவியின் பூஜையை கண்டு உணர்ந்த பெருமான், அவருக்கு காட்சி தந்து அவரது அசுர பயத்தை போக்கி நிலைபெறும் பேரளித்தார். பூமிதேவி வழிபட்டதால் இத்தலம் பூமிசுரம் எனவும் பெயர் விளங்கியது. பூமி தேவியால் நிர்மாணிக்கப் பெற்ற தீர்த்தமே பூமி தீர்த்தம் என பெயர் பெற்றது. இத்தலப் பெருமானை வைகாசி மாதத்தில் பூமி தீர்த்தத்தில் நீராடி பூஜை செய்து வழிபட்டால் அசுர பயம் நீங்கும். பல நன்மைகளும் பெற்று இன்புறலாம் என தல புராணம் கூறுகிறது.

கவுதம முனிவரும், மூவாயிர முனிவர்களும், சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தைக் கண்டு தரிசிக்க பேரார்வம் கொண்டனர். அதன் பொருட்டு அவர்கள் காவிரியின் கரையில் உள்ள அரசவனத்தில் சிவபெருமானை நோக்கி பஞ்சாட்சர மந்திரத்தை தியானித்து கடும் தவம் புரிந்தனர். முனிவர்களின் கடும் தவம் சித்தி பெற்றது. சிவபெருமான் அவர்களது தவத்திற்கு இரங்கி உமாதேவியுடன் தோன்றி காட்சி அளித்தார்.

அக்காட்சியைக் கண்டு வணங்கி மகிழ்ந்த கவுதமமுனிவர், சிவபெருமானை நோக்கி பெருமானே! நாங்கள், உமது ஆனந்த தாண்டவத்தை காணவே தவம் புரிந்தோம். எமக்கு அதனை காட்டியருளுக என வேண்டினார் அதற்கு சிவபெருமான், முனிவர்களே உங்கள் எண்ணம் ஈடேறும். கவலைப்படாதீர். யாம் பூமிதேவியால் பூசிக்கப்படும் காலத்தில் ஆனந்த தாண்டவ காட்சியை காட்டி அருளுவோம். அப்போது நீங்களும் கண்டு தரிசிக்கலாம் எனக்கூறி மறைந்தார்.

அதன்படியே பூமி தேவிக்கு ஆனந்த தாண்டவ காட்சி அருளிய காலத்தில் கவுதம முனிவரும் மற்ற முனிவர்களும் கண்டு தரிசித்து பேரின்ப வெள்ளத்தில் திளைத்து மகிழ்ந்தனர் அத்தாண்டவ காட்சியை உலக மக்களும் கண்டு தரிசித்து மகிழ்ச்சியில் திளைக்க இத்தலத்தில் மிகப்பெரிய ஆனந்த தாண்டவ மூர்த்தியாக(நடராச பெருமான்) எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

கோவிலின் வெளி மண்டபம் நடராசர் மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் கர்ப்பகிரகம் என ஐந்து தனித்தனி அமைப்புகளை கொண்டது. இத்திருக்கோவிலின் கர்ப்பகிரக விமானம், சோழர் கால சிற்பக்கலை பாணியை கொண்ட அமைப்பாகும். இக்கோவிலின் கர்ப்பகிரக ஒன்பது கோஷ்டங்களின் அமைப்பு, திருநாகேஸ்வரம் கோவிலில் ஒன்பது கோஷ்டங்களின் அமைப்பை ஒத்துள்ளது சிந்திக்கத்தக்கது.

திருநாகேஸ்வரம் திருக்கோவிலை கற்றளியாக முதன் முதலில் திருப்பணி செய்தவர் கண்டராதித்த சோழன். கர்ப்பகிரக கோஷ்டங்களில் தெற்குப்பக்கம் தட்சிணாமூர்த்திக்கு அடுத்து கோவிலை கற்றளியாக திருப்பணி செய்த செம்பியன்மாதேவி கண்டராதித்த சோழன், சிவபெருமானை வழிபடுவது போன்ற படைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. அதன்கீழ் செம்பியன் மாதேவி தன் கணவன் கண்டராதித்தன் நினைவாக இக்கோவிலை எடுப்பித்த கல்வெட்டு செய்தியும் செதுக்கப்பட்டுள்ளது.

மூலவர் உமாமகேஸ்வரர், மிக அழகிய லிங்க உருவில் காட்சி அளிக்கிறார். இக்கோவிலில் சுவாமி சன்னதி மேற்கு நோக்கியும், அம்பாள் சன்னதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளன. இத்தலத்தில் சிவபெருமான், உமாதேவியை திருமணம் செய்து கொள்ளும் கல்யாண சுந்தரராக, அம்பிகை தேகசுந்தரி மணப்பெண் கோலத்தில் எதிர், எதிராக உள்ளனர் என்பதை விளக்குவது தான் இக்கோவில் அமைப்பு என கூறப்படுகிறது.

சிவபெருமானும், உமாதேவியும் திருவேள்விகுடியில் திருமண வேள்வியும், திருமணஞ்சேரியில் மாலை மாற்றியும், திருநல்லத்தில் திருக்கல்யாணமும் செய்து காட்சி தந்தனர் என்ற செவிவழிச் செய்தியும் வழங்கி வருகிறது. இம்மூன்று தலத்தையும் வழிபடுவோரின் திருமணம் தடையின்றி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதன் பெருமையும், புனிதமும் காசியை போன்ற சிறப்புடையது ஆகும்.

இக்கோவில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலின் இணை கோவிலாக உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சி.நித்யா மற்றும் ஆலய பணியாளர்கள் விழாக்களை நடத்தி வருகின்றனர்.

நந்தி இல்லாத கோவில்

பூமிதேவி வழிபட்ட பூமீஸ்வரம் என்னும் திரு நல்லத்தின் எட்டு திசைகளிலும் அஷ்டதிக்கு பாலகர்களாள் வழிபடப் பெற்ற தலங்கள் நாகம்பாடி, அன்னியூர், கருவேலி, வயலூர், சிவனாரகரம், அகலங்கண், புதூர், நல்லாவூர் ஆகிய ஊர்களில் உள்ளது. 8 தளங்களுடன் திருமாலால் வழிபடப்பெற்ற திருவீழிமிழலையும், பிரமனால் பூஜிக்கப் பெற்ற வைகல் தலமும் உள்ளன. திருநல்ல தல பெருமானை வழிபடும் முன் அஷ்டதிக்கு தலங்களை வழிபட்டு பின் திருநல்லமுடையாரை வழிபடுவது சிறப்புடையது, நற்பயன் அளிக்கும் என தல புராணம் கூறுகிறது.

திருநல்லம் திருக்கோவிலை கருங்கல் திருப்பணி செய்தவர் கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி ஆவார். இத்திருக்கோவில் மேற்கு நோக்கிய அமைப்புடையது. காசி, ஸ்ரீசைலம் ஆகிய கோவில்களும் மேற்கு நோக்கிய அமைப்புடையவை. திருக்கோவிலுக்கு முன்புறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது. அதன் கீழ்க்கரையில் கோவிலின் முன்புறம் தலவிருட்சமான அரசமரம் உள்ளது. கோவிலின் முன் நுழைவு வாயில், கட்டை கோபுரமாக உள்ளது. அதன் வழியே சென்றால் வெளிப்பிரகார சுற்று அமைந்துள்ளது.

அதன் இரு பக்கங்களிலும் கிழக்கு நோக்கி விநாயகர் கோவில் வலப்புறமும், முருகன் கோவில் இடப்புறமும் அமைந்துள்ளன வெளிப் பிரகாரத்தின் வடக்குப் பக்கம் அம்பாள் கோவில் ஒரு திருச்சுற்றுடன் கிழக்கு நோக்கி தனி கோவிலாக அமைந்துள்ளது. அதனை அடுத்து புரூரவஸ் மன்னனால் பூஜிக்கப்பெற்ற வைத்தியநாதர் கோவில் மேற்கு நோக்கி உள்ளது. இக்கோவிலின் முன்பு நந்தி இல்லை. நந்தி இல்லாத கோவிலில் உள்ள பெருமானை தியானித்து வழிபட்டால் ஒன்றுக்கு நூறு மடங்கு நற்பலன் கிடைக்கும் என்பது புராண கூற்றாகும்.

கோவிலுக்கு செல்வது எப்படி?

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆடுதுறை ரெயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மேலும் கும்பகோணம் காரைக்கால் பேருந்து வழித்தடத்தில் புதூரில் இருந்து தென்கிழக்கே 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கும்பகோணத்தில் இருந்து வடமட்டம் செல்லும் நகரப் பேருந்தில் சென்றால் கோனேரிராஜபுரம் அருகில் இறங்கி திருநல்லம் திருக்கோவிலை சென்றடையலாம்.
Tags:    

Similar News