செய்திகள்
மெரினா கடற்கரை

மெரினாவில் உயிரிழப்பை தடுக்க உயிர்காப்பு பிரிவு தொடக்கம்

Published On 2021-10-15 06:56 GMT   |   Update On 2021-10-15 08:50 GMT
மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவிப்புகளை வழங்கவும் கண்காணிக்கவும் 5 காவல் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை மானியக் கோரிக்கையின்போது சென்னை “மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நீரில் மூழ்கி இறக்கும் நிகழ்வுகளை தடுக்க சென்னை காவல் துறையில் மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவு ஆரம்பிக்கப்படும்” என அறிவித்திருந்தார்.

அதனை செயல்படுத்தும் நோக்கில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் கமி‌ஷனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி மண்டல இயக்குனர் சரண்யா, கடலோர காவல்படை துணை தலைவர் மகாபாத்ரா, கடலோர காவல் படை மீட்பு ஒருங்கிணைப்பு குழு பொறுப்பு அதிகாரி கமாண் டர் பீம்சிங் கோத்தாரி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக திட்ட இயக்குனர் புஷ்பராஜ், தமிழ்நாடு சுகாதார திட்டம் இயக்குனர் உமா, தமிழ்நாடு இணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை கூடுதல் இயக்குநர் சாகுல் ஹமீது, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை கூடுதல் இயக்குனர் (செயலாக்கம்) விஜயசேகர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக கடலோர பாதுகாப்பு கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரை ஒருங் கிணைத்தும், கடலோர காவல்படை ஆய்வாளர் தலைமையில் இயங்கும் மெரினா கடற்கரை உயிர் காப்பு பிரிவில் கூடுதலாக 12 பயிற்சி பெற்ற மீனவ இளைஞர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்த நடவடிக்கை விரைந்து எடுத்திட அறிவுரை வழங்கப்பட்டது.

கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையில் அண்ணா நினைவிடம், காந்தி சிலை மற்றும் எலியட் கடற்கரை பகுதிகளில் அதிக இறப்பு ஏற்பட்டு இருப்பதால் இப்பகுதிகளில் பாதுகாப்பு பயிற்சி பெற்ற உயிர்காப்பு படையினர் நிறுத்தப்பட வேண்டும் எனவும், கடற்கரையை பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவிப்புகளை வழங்கவும் கண்காணிக்கவும் 5 காவல் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மெரினா கடற்கரை பகுதிகளில் விழிப்புணர்வு எச்சரிக்கை பலகைகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ முடிவு செய்யப்பட்டது.

அவசர உயிர் காக்கும் சேவைக்கு என இரண்டு 108 அவசர சிகிச்சை வாகனங்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம், கடலோர காவல்படை மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி உயிர் இழப்பு இல்லாத பாதுகாப்பான சென்னை மெரினா கடற்கரையை உருவாக்க ஒத்துழைப்பது என முடிவு செய்யப்பட்டது.

காவல் துறையில் ஆயுத படை போலீசார் 50 பேருக்கு உயிர் காக்கும் நீச்சல் பயிற்சி அளித்து அவர்களையும் கூடுதலாக பணி அமர்த்த முடிவு செய்யப்பட்டது.

உயிர்காக்கும் நீச்சல் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பணியாற்றலாம். அவர்கள் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண். 044-28447752 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.


Tags:    

Similar News