செய்திகள்
எடியூரப்பா

ஆன்லைன் மூலம் கற்பித்தலுக்கு அதிக முக்கியத்துவம்: எடியூரப்பா உத்தரவு

Published On 2020-05-27 03:41 GMT   |   Update On 2020-05-27 03:41 GMT
ஆன்லைன் மூலம் கற்பித்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு :

முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் உயர்கல்வித்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறையை நிர்வகிக்கும் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் எடியூரப்பா பேசியதாவது:-

“ஆன்லைன் மூலம் கல்வி கற்பித்தலை உயர்கல்வித்துறை தொடங்கி நடத்தி வருகிறது. இதற்கு ஆகும் செலவு நேரடி வகுப்பு கற்பித்தலுக்கு ஆகும் செலவைவிட குறைவு தான். இதேபோல் ஆன்லைன் மூலம் கற்பித்தலை பி.யூ.கல்லூரிகளில் தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மொத்தத்தில் ஆன்லைன் மூலம் கற்பித்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

ஊரடங்கிற்கு முன்பு 79 சதவீத பாடங்கள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். மீதமுள்ள பாடங்களை வருகிற 31-ந் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக நடத்தி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெப் எக்ஸ், ஸ்கைப் உள்பட பல்வேறு ஆன்லைன் செயலிகள் மூலம் மாணவர்களுக்கு 30 ஆயிரம் வகுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.

வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகள் மூலம் 85 சதவீத மாணவர்களுக்கு மின்னணு குறிப்புகள், பழைய வினாத்தாள் தொகுப்பு போன்றவை வழங்கப்பட்டுள்ளன. யூ-டியூப் சேனல் மூலம் 65 அம்சங்கள் குறித்து 7,074 கற்பித்தல் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த வீடியோக்கள் மாணவர்களால் 5 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.

கெட் சி.இ.டி. கோ என்ற ஆன்லைன் பக்கத்தை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்த்து பயிற்சி பெற்று வருகிறார்கள். 13 ஆயிரத்து 600 மாணவர்கள் யூ-டியூப் சேனல் சந்தாதாரர்களாக தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். இந்த சேனலுக்கு 4 நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது. இந்த ஆன்லைன் பக்கம் மூலம் தரமான பயிற்சி மாணவர்களுக்கு கிடைத்துள்ளது.

நடப்பாண்டில் முதல் ஆண்டு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்பித்தல் திட்டம் தொடங்கப்படும். கொரோனா பிரச்சினையால் டிஜிட்டல் மூலம் கற்பித்தல் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. மைத்ரி சகாயவாணி என்ற செயலி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ரூ.11 கோடி செலவில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளை முழுமையான அளவில் நிர்வகிக்க மின் ஆளுமை திட்டம் அமல்படுத்தப்படுகிறது.”

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இதில் பேசிய துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், “கர்நாடகத்தில் 13 சட்டசபை தொகுதிகளில் அரசு கல்லூரிகள் இல்லை. அதனால் பிற பகுதிகளில் அதிகமாக உள்ள கல்லூரிகளை அந்த பகுதிகளுக்கு இடம் மாற்றப்படும். பெங்களூருவில் உள்ள அம்பேத்கர் பொருளாதார கல்லூரி கட்டிட கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. ஊரடங்கு முடிந்த பிறகு இதன் திறப்பு விழாவுக்கு பிரதமரை அழைக்க இருக்கிறோம்” என்றார்.

இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், முதல்-மந்திரியின் ஆலோசகர் லட்சுமி நாராயணா, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஐ.எஸ்.என்.பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News