செய்திகள்
ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் - ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்தப்பட்ட சரக்கு ஆட்டோ

சரக்கு ஆட்டோவில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- 2 பேர் கைது

Published On 2020-11-21 05:20 GMT   |   Update On 2020-11-21 05:20 GMT
சமயபுரம் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சமயபுரம்:

திருச்சி மாவட்டம் சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடியில் சந்தேகத்திற் கிடமான வகையில் வந்த ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 25 கிலோ எடை கொண்ட 30 மூட்டை ரேஷன் அரிசி கடத்திச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சரக்கு ஆட்டோவில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள், மேலரசூர் கீழத்தெருவை சேர்ந்த பரமசிவம் (வயது 31), பெரகம்பி குறும்பர் தெருவை சேர்ந்த பிரபு (27) என்பதும் தெரியவந்தது. மேலும், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மேலும் 10 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. ரேஷன் கடையில் வழங்கப்படும் இலவச அரிசியை வாங்கும் குடும்பத்தினரிடம் வீடு, வீடாகச் சென்று குறைந்த விலைக்கு வாங்கி அதை அரைத்து கோழித் தீவனமாகவும், ஓட்டல்களுக்கும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 40 மூட்டைகளில் இருந்த 1 டன் ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமசிவம், பிரபு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் சரக்கு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களையும், அரிசி மூட்டைகளையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் வசம் போலீசார் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News