செய்திகள்
கங்கனா ரணாவத்

நடிகை கங்கனா ரணாவத்தின் கருத்து வன்முறையை தூண்டவில்லை: ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்

Published On 2021-02-16 01:57 GMT   |   Update On 2021-02-16 01:57 GMT
நடிகை கங்கனா ரணாவத்தின் கருத்து வன்முறையை துண்டவில்லை என்று தேசத்துரோக வழக்கு விசாரணையின் போது அவரது வக்கீல் வாதிட்டார்.
மும்பை :

இந்தி நடிகை கங்கனா ரணாவத், அவரது சகோதரி ரங்கோலி ஆகியோருக்கு எதிராக சினிமா காஷ்டிங் இயக்குனர் முனாவர் அலி என்பவர் மும்பை பாந்திரா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், டுவிட்டர் பதிவு மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்கள் மூலம் இந்தி திரைப்பட துறையை தொடர்ந்து அவதூறு செய்துள்ளனர். அவர்களின் கருத்துக்கள் சமூகங்களிடையே பகைமையை வளர்த்தது. வன்முறையை தூண்டியது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்ட்டின் உத்தரவின் பேரில், நடிகை கங்கனா ரணாவத், ரங்கோலி ஆகிய இருவர் மீதும் மும்பை போலீசார் தேசத்துரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீசார் அனுப்பிய சம்மனை ஏற்று இருவரும் சமீபத்தில் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

இதற்கிடையே தங்களுக்கு எதிராக பதியப்பட்டு உள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும், பாந்திரா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஆகியோர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது சமீபத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்த காஸ்டிக் இயக்குனர் முனாவல் அலி, "நடிகை கங்கனா ரணாவத் மற்றும் ரங்கோலி ஆகியோர் தங்கள் ட்வீட் மூலம் வெறுப்பையும் அவமதிப்பையும் ஊக்குவித்தனர், மேலும் மராட்டிய அரசாங்கத்தின் மீது அதிருப்தியை தூண்டினர்" என்று கூறினார்.

இதற்கிடையே கங்கனா ரணாவத் மனு நேற்று நீதிபதிகள் எஸ்.எஸ். ஷிண்டே மற்றும் மனிஷ் பிடலே ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கங்கனா ரணாவத் சார்பில் அவரது வக்கீல் ரிஸ்வான் சித்திக் ஆஜராகி வாதிட்டபோது, காஸ்டிக் இயக்குனர் முனாவர் அலியின் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்தார். மேலும் அவர் கூறியதாவது:-

நடிகை கங்கனா ரணாவத் டுவிட்டர் பதிவு மூலம் எந்த தவறையும் செய்யவில்லை. அவரது கருத்து எதுவும் வன்முறையை தூண்டவில்லை. அல்லது எந்த குற்றச்செயலையும் ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் அவர் மீது தேசத்துரோக வழக்கு தவறாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் பாந்திரா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தவறிழைத்து உள்ளது. எனவே நடிகை கங்கனா ரணாவத் மீது பதியப்பட்டு உள்ள தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதையடுத்து விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் ரங்கோலியை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News