ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையான் கோவில் பார்வேடு அருகே உற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் பார்வேடு அருகே உற்சவம்

Published On 2021-01-16 08:00 GMT   |   Update On 2021-01-16 08:00 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாட்டுப்பொங்கல் அன்று பார்வேடு உற்சவம் நடந்தது. பார்வேடு மண்டபத்தில் உற்சவர்களை வைத்து ஆஸ்தானம், சிறப்புப்பூஜைகள், நைவேத்தியம் செய்யப்பட்டது.
திருமலை 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மகர சங்கராந்தி பண்டிகை முடிந்ததும் மறுநாளான நேற்று மாட்டுப்பொங்கல் அன்று பார்வேடு உற்சவம் நடந்தது. அதையொட்டி திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் உள்ள ஆண்டாள் சன்னதியில் இருந்து, அவர் சூடிக்கொடுத்த பூமாலை, துளசி மாலை ஆகியவற்றை திருமலைக்குக் கொண்டு வந்து, பெரிய ஜீயர் மடத்தில் வைத்தனர். அங்கு சிறப்புப்பூஜைகள் செய்து, பெரிய ஜீயர் சுவாமிகள் தனது தலையில் சுமந்தபடி ஊர்வலமாக கோவிலுக்குள் கொண்டு வந்தார். அவருடன் சின்னஜீயர் சுவாமிகள், கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் உடன் வந்தனர்.

அதைத்தொடர்ந்து காலை ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் மூலவர் ஏழுமலையானுக்கு சூட்டப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. மதியம் கோவிலில் இருந்து உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோரை தனித்தனி தங்கத் திருச்சி வாகனத்தில் வைத்து, திருமலையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பார்வேடு மண்டபத்துக்கு மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டிக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்தனர்.

பார்வேடு மண்டபத்தில் உற்சவர்களை வைத்து ஆஸ்தானம், சிறப்புப்பூஜைகள், நைவேத்தியம் செய்யப்பட்டது. நைவேத்தியம் செய்த பொருட்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மாலை 5 மணியளவில் பார்வேடு மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக கோவிலுக்குள் உற்சவர்களை கொண்டு வந்தனர். ஊர்வலம் புறப்பட்டதும் உற்சவர் மலையப்பசாமி, ஈட்டியால் புலியை வேட்டையாடும் நிகழ்ச்சியை அர்ச்சகர் ஒருவர் நடித்துக் காட்டினார். பார்வேடு உற்சவத்தில் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News