செய்திகள்

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து- தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் கேள்வி

Published On 2019-01-23 06:23 GMT   |   Update On 2019-01-23 06:23 GMT
திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பை ரத்து செய்வதற்கு மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் முறையான அனுமதி பெற்றதா? என்று மதுரை ஐகோர்ட் கிளை கேள்வியெழுப்பியுள்ளது. #MaduraiHCBench #ThiruvarurByElection
மதுரை:

மதுரை மாவட்டம், திருமங்கலம், மதிப்பனூரைச் சேர்ந்த தாமோதரன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 28-ந்தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து கஜா புயல் நிவாரணப்பணிகள் முடியாத நிலையில் இப்போதைக்கு இடைத்தேர்தல் தேவையில்லை என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை. இதற்கு மத்திய அரசுடன் ஆலோசித்து ஒப்புதல் பெற வேண்டும்.

மேலும் தமிழக தலைமை செயலாளர் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டதற்காக ரத்து செய்ய முடியாது. இது சட்ட விரோதமாகும்.


எனவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்த அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். ரத்து செய்த அறிவிப்பு செல்லாது என்று உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இடைத்தேர்தல் அறிவிப்பை ரத்து செய்வதற்கு மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் முறையான அனுமதி பெற்றதா? என்பதற்கு வருகிற 30-ந் தேதி தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் வழக்கு விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர். #MaduraiHCBench #ThiruvarurByElection
Tags:    

Similar News