செய்திகள்

மின்வாரிய ஊழியர் வீடு உள்பட 2 இடங்களில் 31 பவுன் நகைகள் திருட்டு

Published On 2019-05-11 12:00 GMT   |   Update On 2019-05-11 12:00 GMT
அன்னூர், பெரியநாயக்கன் பாளையத்தில் மின்வாரிய ஊழியர் வீடு உள்பட 2 இடங்களில் 31 பவுன் நகைகள் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள தெற்கு பாளையம் தாமு நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன். இரவது மனைவி சிவகாமி (வயது 45). மின்சார வாரிய ஊழியர்.

நேற்று காலை இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் மாலையில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த சிவகாமி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது அறையில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த கம்மல், வளையல், மோதிரம் உள்பட 11¼ பவுன் தங்க நகைகளை கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து சிவகாமி பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

அன்னூர் அருகே உள்ள ஒட்ரபாளையம் அம்மன் நகரை சேர்ந்தவர் தவமூர்த்தி (வயது 55). ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. மேலாளர்.

கடந்த 7-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூருக்கு சுற்றுலா சென்றார். நேற்று காலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது.

அதிர்ச்சியடைந்த தவமூர்த்தி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த செயின், வளையல், கம்மல், மோதிரம் உள்பட 19½ பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து தவமூர்த்தி அன்னூர் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து செய்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News