லைஃப்ஸ்டைல்
திருமணமான பெண்களிடம் எந்தெந்த வயதில் தாம்பத்திய ஆசைகள் எப்படி இருக்கும்

திருமணமான பெண்களிடம் எந்தெந்த வயதில் தாம்பத்திய ஆசைகள் எப்படி இருக்கும்

Published On 2020-11-19 08:24 GMT   |   Update On 2020-11-19 08:24 GMT
‘தம்பதிகள் இருவரில் யாருக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் அதிகம்?’- என்ற ருசிகரமான ஆராய்ச்சி உலகளாவ நடந்துகொண்டிருக்கிறது. திருமணமான பெண்களிடம் எந்தெந்த வயதில் தாம்பத்திய ஆசைகள் எப்படி இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
‘தம்பதிகள் இருவரில் யாருக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் அதிகம்?’- என்ற ருசிகரமான ஆராய்ச்சி உலகளாவ நடந்துகொண்டிருக்கிறது. ஆய்வு முடிவுகளை பாலியல் நிபுணர்கள் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள்.

அதில் அதிரடி திருப்பமாக வெளிவந்திருக்கும் தகவல் என்னவென்றால், 35 வயதுப் பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு தாம்பத்திய ஆர்வம் அதிகரித்திருக்கிறதாம். அதே வயதுடைய ஆண்களில் 55 சதவீதம் பேர்தான் இந்த ஆர்வப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்கள்.

35 வயது பெண்மணி ஒருவரிடம் இந்த ஆய்வு பற்றி ஆய்வுக்குழு கருத்துக்கேட்டபோது “நான் தாம்பத்திய தொடர்பை அதிகம் விரும்புபவள்தான். ஆனால் அலுப்புதரும் அலுவலக வேலையால் தினமும் சோர்ந்து போகிறேன். மாதம் நான்கு முறைதான் கணவருடன் உறவு வைத்துக்கொள்ள முடிகிறது. கணவரும் என்னைப் போலவே நீண்ட நேரம் பணி செய்கிறார். அதனால் 40 வயதுக்குப் பிறகு அவருக்கு ஆர்வம் குறையத் தொடங்கியிருக்கிறது. அவரின் நீண்ட நேர பயணம், பணிச்சூழலின் மனஅழுத்தம், பணக்கவலை எல்லாம் எங்கள் தாம்பத்திய வாழ்க்கையை முழுங்கி வருகிறது” என்கிறார்.

கருத்துக்கணிப்பில் இடம்பெற்ற 30 வயது இளம் பெண் ஒருவரின் கருத்து மிகவும் கவனிக்கத் தகுந்ததாக இருக்கிறது. “நாங்கள் இருவரும் கடைசியாக எப்போது உறவு வைத்துக்கொண்டோம் என்பதே நினைவில் இல்லை. அந்த அளவிற்கு நாங்கள் உறவு கொண்டு பல மாதங்கள் ஆகிவிட்டன” என்று வேதனையோடு கூறியிருக்கிறார்.

இந்த வேதனைக்கு காரணம், இளம் ஆண்-பெண் இருபாலரின் சம்பாதிக்கும் ஆசைதான். 25-30 வயது என்பது, வாழ்க்கைக்கு அடிப்படையான வருவாயைத் திரட்டும் பருவமாக இருக்கிறது. எனவே பெரும்பாலும் ஆண்கள் (பரவலாக தம்பதியினர்) கூடுதல் நேரம் வேலை செய்து வருவாய் ஈட்டவே விரும்புகிறார்கள். ஒரு குழந்தை போதுமென்றும், தாம்பத்திய உறவை குறைத்துக் கொள்வது நல்லது என்றும் கூட்டாக முடிவு செய்கிறார்கள். இந்தக் கூடுதல் வேலைப்பளுவால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாலியல் ஆர்வம் குறைந்து விடுகிறது.

இப்படி எல்லாம் இருந்தாலும் 35 வயதை நெருங்கும்போது பெண்கள் அதிக தாம்பத்திய ஆர்வத்துக்கு உள்ளாகிறார்கள். இருந்தாலும்கூட அப்போது அவர்களின் குழந்தைகளும் வளரிளம் பருவத்தை அடைகிறார்கள். அதனால் உறவை தவிர்க்கிறார்கள் என்றும் சர்வே சொல்கிறது.

இந்தக் கருத்தை 40 வயது குடும்பத்தலைவி ஒருவர் ஒத்துக்கொள்கிறார். “நான் 25-வது வயதிலேயே 2 குழந்தைகளுக்கு தாயாகி விட்டேன். அப்போதிருந்தே வேலைக்கும்-குழந்தைகளுக்கும் இடையே ஓடிக் கொண்டிருக்கிறேன். இப்போது அந்த அலைச்சல் குறைந்திருப்பதால் என் தாம்பத்திய ஆசைகள் திரும்புவதாக உணர்கிறேன். ஆனால் என் கணவர் இந்த உணர்வுகளை புரிந்து கொள்வதில்லை” என்று கூறியிருக்கிறார்.

திருமணமான பெண்களிடம் எந்தெந்த வயதில் தாம்பத்திய ஆசைகள் எப்படி இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

30 வயதுகளில் பெண்களுக்கு தாம்பத்திய திருப்தி அதிகம் ஏற்படுகிறது. அதிகமாக ஆர்வமும் காட்டுவார்கள். அவர்கள் மனஅமைதி நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தால், இந்த வயதில் தாம்பத்திய ஆசை உச்சத்துக்குச் செல்லும். குழந்தைகள் இருந்தால் அவர்களை கவனிப்பது, பராமரிப்பது, குடும்ப நிர்வாகம் போன்ற அனுதின பிரச்சினைகள், அவர்களது தாம்பத்திய ஆர்வத்தை குறைக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

40 வயதுகளில் பெண்களுக்கு ஹார்மோன்கள் சுரப்பது குறையத் தொடங்குகிறது. ஆனாலும் பாலியல் உணர்வுகள் மறுபடியும் மேலெழ ஆரம்பிக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை, உறுதியான வருவாய் இல்லாத நிலை போன்றவை பெரும்பாலான பெண்களின் உறவு உணர்வுகளை ஒதுக்கச் செய்கிறது.

ஐம்பது வயதுகளில் பெண்கள் மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் கட்டத்தை அடைகிறார்கள். அதனுடன் போராடத் தொடங்குவதால் பாலியல் ஆர்வத்தை குறைக்கிறது இந்தப் பருவம்.

இதில் நீங்கள் எந்த வயதில் இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்குத் தக்கபடி உங்கள் தாம்பத்திய ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் தம்பதிகளிடம் இணக்கமும், மகிழ்ச்சியும் உருவாக தாம்பத்தியம் தேவைப்படுகிறது. தாம்பத்திய திருப்திக்கு மனைவி மட்டும் உடல் நலத்தை கவனித்தால் போதாது. கணவரும் உடல் மீது அக்கறை கொள்ள வேண்டும். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் இருவரும் இணக்கமாக இருந்தால்தான் திருப்தியான பாலுறவை மேற்கொண்டு மகிழ்ச்சியாக வாழமுடியும்.
Tags:    

Similar News