செய்திகள்
ரோரி பர்ன்ஸ் நிதான ஆட்டம்

ஓவல் டெஸ்ட் - நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 77/0

Published On 2021-09-05 17:54 GMT   |   Update On 2021-09-05 17:54 GMT
இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளில் இந்தியாவின் ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர் இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.
ஓவல்:

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன் எடுத்தது.

அதன்பின், 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 127 ரன்களும், புஜாரா 61 ரன்களும் விளாசினர். கேப்டன் விராட் கோலி 22 ரன்னும், ஜடேஜா 9 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஜடேஜா 14 ரன்களிலும், ரகானே 4 ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினர். கேப்டன் கோலி 44 ரன்களில் வெளியேறினார்.
 


அதன்பின், இறங்கிய ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர் இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்து அரை சதம் கடந்தனர். ஷர்துல் தாகூர் 60 ரன்களும், ரிஷப் பண்ட் 50 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

பும்ரா (24), உமேஷ் யாதவ் (25) தங்கள் பங்களிப்பை வழங்க, இந்திய அணி 2வது இன்னிங்சில் 466 ரன்கள் குவித்தது. இதனால் இங்கிலாந்தைவிட 367 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றது.

இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், ராபின்சன், மொயீன் அலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது நிதானமாக ஆடினர்.

நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்துள்ளது. ரோரி பர்ன்ஸ் 31 ரன்னும், ஹமீது 43 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
Tags:    

Similar News