ஆன்மிகம்
இறைவனை தியானிப்பது

இறைவனை தியானிப்பது

Published On 2019-07-09 04:28 GMT   |   Update On 2019-07-09 04:28 GMT
இறைவனை தியானிப்பது என்பது இறைவனை புகழ்வது, அவனை மேன்மைப்படுத்துவது, அவனை பரிசுத்தப்படுவது ஆகிய அனைத்தும் அடங்கும்.
இறைவனை தியானிப்பது இறைநம்பிக்கையின் ஒரு பகுதி. இறைவனை தியானிப்பது என்பது இறைவனை புகழ்வது, அவனை மேன்மைப்படுத்துவது, அவனை பரிசுத்தப்படுவது ஆகிய அனைத்தும் அடங்கும்.

இறைவனை தியானிக்கும் முறையில் பல்வேறு நிலைகள் அடங்கியுள்ளன. அவை: தொழுகையில் இறைவனை தியானிப்பது. உண்ணாமல், பருகாமல், இச்சைகளை அடக்கி நோன்பிருந்து இறைவனை தியானிப்பது. சாதாரண நிலையில் அன்றாடம் இறைவனை தியானிப்பது.

இறைதியானம் அனைத்திலும் வியாபித்துள்ளது. அன்றாட செயல்பாடுகளில் அது இரண்டறக் கலந்துள்ளது. இறை வழிபாடே வாழ்க்கை என்றிருக்குமானால் உலகமே முடங்கிவிடும். யாருமே வேலைக்குச் செல்லாமல் பள்ளிவாசல்களிலேயே ‘அல்லாஹ்... அல்லாஹ்’ என்று கூறி தஞ்சமடைய வேண்டியதாகிவிடும். இல்லறத்தை துறக்க நேரிடும். செய்யும் வேலையை இழக்க நேரிடும். பிறருக்கு உதவமுடியாமல் போய்விடும். குடும்பத்தை கவனிக்க வழி இல்லாமல் ஆகிவிடும்.

இத்தகைய நிலைகளை இஸ்லாம் எவ்வாறு மாற்றி அமைக்கிறது? என்பதை பார்ப்போம்.

எப்போதும் இறைவழிபாடு என்பது வாழ்க்கை அல்ல. வாழ்க்கையே ஒரு இறைவழிபாடு தான். அந்த வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் இறை சிந்தனை, இறைவனின் நினைவு வந்தால் போதும். எந்த ஒரு செயலையும் இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கும் போது அந்த செயல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு, அது நன்மை வழங்கப்படும் வணக்கமாக ஆகிவிடுகிறது.

படிக்கும்போது, எழுதும்போது, ஓதும்போது, உண்ணும்போது, பருகும்போது, உடை மாற்றும்போது, ஆடை அணிகலன்கள் அணியும்போது, தலைவாரும்போது இறைவனின் திருப்பெயரால் தொடங்கினால் போதும். இவை அனைத்தும் இறை தியானமாக அங்கீகாரம் செய்யப்படுகிறது.

தூங்கும் போது, ‘இறைவனின் திருப்பெயரால் நான் தூங்குகிறேன் என்றும்; தூக்கத்திலிருந்து விழிக்கும் போது, ‘தூக்கம் எனும் சிறு மரணத்திற்கு பிறகு வாழ்வளித்த இறைவனுக்கே புகழனைத்தும்’ என்றும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பிராணியை அறுக்கும்போது, வீட்டிலிருந்து வெளியேறும் போது, வீட்டினுள் நுழையும்போது ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூற வேண்டும்.

ஒவ்வொரு நற்செயலை தொடங்கும்போதும் ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரகீம்’ (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய இறைவனின் திருப்பெயரால் தொடங்குகிறேன்) என்று கூறுவது நாவு சார்ந்த இறைநம்பிக்கை ஆகும்.

‘அல்லாஹ்’ என்பது அரபுச்சொல். இதற்கு ஒருமையோ, பன்மையோ கிடையாது. இது ஆண்பாலும் அல்ல, பெண்பாலும் அல்ல. அனைத்து ஆற்றல்களும், உயர் பண்புகளும் கொண்ட எல்லாம் வல்ல இறைவனைக் குறிக்கும் பெயர்ச்சொல் ஆகும்.

இஸ்லாத்தை ஏற்கும்முன்பு வாழ்ந்த அரபிகள் ‘அல்லாஹ்’ என்பது ஈடு இணையில்லாத இறைவனுக்குரிய பெயர் என்று கருதினர். அதனால்தான் அறியாமைக்காலத்தில் கூட தாங்கள் வழிபட்டு வந்த எந்த சிலைகளுக்கும் ‘அல்லாஹ்’ எனும் பெயரைச் சூட்டவில்லை.

அரபு மக்களிடையே ஒரு வழக்கம் இருந்தது. ஏதேனும் ஒரு செயலை ஆரம்பிக்கும் போது அவரவர் வழிபடும் சிலைகளின் பெயர்களைக்கூறி ஆரம்பம் செய்தனர். இவ்வாறு தொடங்கும் பணி வெற்றிபெறும் என்பது அவர்களின் மூடநம்பிக்கை. இதை ஒழிக்கும் முகமாகத்தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற திருக்குர்ஆனின் முதல் வசனமே ‘இறைவனின் பெயரால் ஓதுவீராக’ எனத்தொடங்கியது.

‘முஹம்மதே, படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக’. (திருக்குர்ஆன் 96:1)

திருக்குர்ஆனின் முதல் அத்தியாயத்தில் இடம்பெற்ற முதல் வசனமும் ‘பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரகீம்’ என்பதும் இதன் தனிச்சிறப்பம்சம் ஆகும்.

நபி நூஹ் (அலை) அவர்கள் தமது கப்பலை கடலில் செலுத்தும் முன்பு கூட ‘பிஸ்மில்லாஹ்’ (இறைவனின் திருப்பெயரால் செலுத்துகின்றேன்) என்று கூறியதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

‘இதில் (கப்பலில்) ஏறிக்கொள்ளுங்கள். இறைவனின் பெயராலேயே இது ஓடுவதும், நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’ என்று (நூஹ்) அவர் கூறினார். (திருக்குர்ஆன் 11:41)

நபி சுலைமான் (அலை) அவர்களும், ஸபா நாட்டு ராணிக்கு கடிதம் எழுதும் போது கூட ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரகீம்’ என்று தொடங்கிதான் கடிதம் எழுதினார்கள் என்பதும் திருக்குர்ஆனின் கூற்று.

‘அது (கடிதம்) சுலைமானிடமிருந்து வந்துள்ளது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால். என்னை மிகைக்க நினைக்காதீர்கள். கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள் (என்று அதில் உள்ளது)’. (திருக்குர்ஆன் 27:31)

‘பிஸ்மில்லாஹ்‘ என்ற சொல் எல்லா சமுதாயத்திற்கும் வழங்கப்பட்ட ஒரு அருட்கொடை. அது மட்டுமல்ல அதில் இடம் பெற்றுள்ள ‘அல்லாஹ்’ என்பது ‘இஸ்முல் ஆலம்’ (மகத்தான திருநாமம்) என்பதாகும். இதைக்கொண்டு இறைவனிடம் பிரார்த்தித்தால் அந்த பிரார்த்தனை ஏற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நபி (ஸல்) அவர்களும், ரோம் நாட்டு மன்னன் ஹிர்கலுக்கு கடிதம் எழுதி அனுப்பும் போது, அந்த கடிதத்தை ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரகீம்’ என்பதைக் கொண்டுதான் ஆரம்பித்தார்கள்.

‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரகீம் என்பதைக் கொண்டு தொடங்கப்படாத ஒவ்வொரு காரியமும், அபிவிருத்தி இல்லாமல் இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: தாரகுத்னீ)

பிஸ்மில்லாஹ்வை கூறவேண்டிய இடத்தில் கூறவேண்டும், எழுத வேண்டிய இடத்தில் எழுதவேண்டும். எந்த இடமாக இருந்தாலும் அதை வைத்துத்தான் ஒவ்வொரு நற்செயலையும் தொடங்கிட வேண்டும்.

எழுதும்போது இந்த வாசகத்தை எழுதுவதற்கு பதிலாக சிலர், இந்த வாசகங்களின் அடையாள மதிப்பீட்டுத் தொகையான ‘786’ என்ற எண் குறியீடுகளை பயன்படுத்துகின்றனர். இதற்கு ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறிய நன்மை கிடைக்காது. இதற்கு மார்க்க ரீதியிலும், தர்க்க ரீதியிலும் அடிப்படையான ஆதாரம் இல்லை.

மலம், சிறுநீர் கழிக்கச் செல்லும் முன்பு, காலைக் கடன்களை முடித்துவிட்டு திரும்பும்போது, இறைவனை நினைத்து, அவனுக்கு நன்றி செலுத்துவது, தும்மினால் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று கூறுவது, கொட்டாவி வந்தால் ‘அஊது பில்லாஹி மினஷ் சைத்தான்’ என்று கூறுவது, ஆச்சரியமான செய்தியை கேள்விப்படும் போது ‘சுப்ஹானல்லாஹ்’ (இறைவன் பரிசுத்தமானவன்) என்று கூறுவது, மகிழ்ச்சியான செய்தியை கேட்கும் போது ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் இறைவனுக்கே) என்று கூறுவது, துக்கமான செய்தியை செவிமடுக்கும் போது ‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ (நாங்கள் இறைவனுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்று கூறுவது போன்ற அனைத்துமே இறை தியானம் தான். இவ்வாறு இறைவனை தியானிப்பது மற்ற செயல்களை விடவும் சிறந்ததாக அமைகிறது.

‘நம்பிக்கை கொண்டோரே, இறைவனை அதிகமதிகம் நினையுங்கள். அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்’. (திருக்குர்ஆன் 33:41,42)

இறைவனை நினைவு கூர்வதற்கு ஒளு (முகம், கை, கால்களை சுத்தம் செய்வது) தேவையில்லை. தொழும் திசையை நோக்க வேண்டியதில்லை. தொழுகையைப் போன்று குறிப்பிட்ட நேரம் இல்லை. நோன்பைப் போன்று குறிப்பிட்ட மாதம் இல்லை. ஹஜ்ஜைப் போன்று குறிப்பிட்ட வருடம் இல்லை. நின்றவாறு, அமர்ந்தவாறு, படுத்தவாறு இறைவனை தியானிக்கலாம்.

‘உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக, கவனமற்றவராக ஆகிவிடாதீர்’. (திருக்குர்ஆன் 7:205)

‘நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க, இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன’. (திருக்குர்ஆன் 13:28)

‘லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறு எவருமில்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்)’ என்று கூறுவது இறைநம்பிக்கையின் முதன்மையான அஸ்திவாரம் ஆகும். இந்த வார்த்தையை உள்ளத்தால் உளப்பூர்வமாக ஏற்று, நாவினால் மொழிய வேண்டும். இதை ஏற்காமல் மொழியாதவரை எவரும் இறை நம்பிக்கையாளராக முடியாது என்பதை இஸ்லாம் திட்டவட்டமாக கூறுகிறது.

‘இறை நம்பிக்கை என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது லாயிலாஹா இல்லல்லாஹ் (முஹம்மதுர் ரசூலுல்லாஹ்) என்று கூறுவதாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

‘தியானத்தில் சிறந்தது ‘லாயிலாஹா இல்லல்லாஹ்’ என்று கூறுவது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: திர்மிதி)

‘ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து ‘இறைவனின் தூதரே, இஸ்லாமிய ஷரீஅத் சட்டதிட்டங்கள் என் மீது அதிகமாகி விட்டது. எனவே நான் நிரந்தரமான தொடர்பில் இருக்கும்படியான ஒரு விஷயத்தை எனக்கு நீங்கள் அறிவியுங்கள்’ என வேண்டினார். அதற்கு நபியவர்கள் ‘உமது நாவு இறைதியானத்திலேயே தொடர்ந்து நிலைத்திருக்கட்டுமாக’ என பதில் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் புஸர் (ரலி), திர்மிதி)

இறைவனை, ‘சுப்ஹானல்லாஹ்’ (இறைவன் பரிசுத்தமானவன்), ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப்புகழும் இறைவனுக்கே), ‘அல்லாஹூ அக்பர்’ (இறைவன் மிகப்பெரியவன்), ‘லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்று நினைவு கூர்ந்து, அதிகம் அதிகம் உச்சரிக்க வேண்டும். இவ்வாறு கூறுவதின் வழியாக இறைநம்பிக்கையையும், சொர்க்கத்தின் இருப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

‘சொர்க்கத்தின் திறவுகோல் லாயிலாஹா இல்லல்லாஹ் (முஹம்மதுர் ரசூலுல்லாஹ்) என்று கூறுவது என நபி (ஸல்) அவர்கள் எனக்கு கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: முஆத்பின் ஜபல் (ரலி), நூல்: அஹ்மது).
Tags:    

Similar News