ஆன்மிகம்
பழனி முருகன் கோவில்

பழனி முருகன் கோவிலில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் அனுமதி

Published On 2020-09-01 06:17 GMT   |   Update On 2020-09-01 06:17 GMT
பழனி முருகன் கோவிலில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் நேற்று முன்தினம் தமிழக அரசு அறிவித்தது. இதில் வழிபாட்டு தலங்களில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்கலாம் என்று உத்தரவிட்டது. இதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கோவில் நடைகள் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக பழனி முருகன் கோவிலில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடந்தது. பக்தர்கள் தரிசனத்திற்கு நிற்கும் வரிசையில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்கு ஏற்ற வகையில் மஞ்சள் நிற பெயிண்டு மூலம் கட்டம் வரையப்பட்டது.

மேலும் கோவிலில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் நேற்று அறிவித்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். www.tnh-r-n-ce.gov.in என்ற இணையதள முகவரியில் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு அனுமதி சீட்டு வைத்துள்ளவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். முக கவசம் இல்லாமல் வரும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும். தெர்மல் ஸ்கேனர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பும், சளி, இருமல் மற்றும் காய்ச்சல் இல்லாதவர்கள் மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

பக்தர்கள் தேங்காய், பழம், பூ ஆகியவற்றை கொண்டு வருவதற்கு அனுமதி கிடையாது. பக்தர்கள் கோவிலில் வரையப்பட்டுள்ள குறியீடுகளில் முறையாக நின்று சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்ய வேண்டும். மலைக்கோவிலுக்கு படிப்பாதை வழியே மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர். மின்இழுவை ரெயில், ரோப் கார் ஆகியவற்றின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்னதானம், தங்கரத புறப்பாடு ஆகியவை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. முடி காணிக்கை நிலையத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். 10 வயதுக்கு உட்பட்டகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் திண்டுக்கல்லில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில், அபிராமி அம்மன் கோவில், வெள்ளை விநாயகர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் சமூக இடைவெளி விட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
Tags:    

Similar News