ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

தவறுகளை திருத்திக்கொள்வோம்

Published On 2021-04-27 03:41 GMT   |   Update On 2021-04-27 03:41 GMT
ஒரு முஸ்லிம் தவறுகளை தவிர்ப்பது அவசியம். ஒருவேளை தவறு செய்தால், அதில் இருந்து மீளவும், அந்த தவறை இறைவன் மன்னிக்கவும் முத்தான மூன்று வழிகள் உண்டு.
மகத்துவம் நிறைந்த ரமலானுக்கு ‘ஷஹ்ருத் தவ்பா’ - ‘மனந்திருந்தி தவறுகளிலிருந்து விலகி நிற்கும் மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.

ஒரு முஸ்லிம் தவறுகளை தவிர்ப்பது அவசியம். ஒருவேளை தவறு செய்தால், அதில் இருந்து மீளவும், அந்த தவறை இறைவன் மன்னிக்கவும் முத்தான மூன்று வழிகள் உண்டு.

1) தனது தவறை உணர்ந்து, அதிலிருந்து விடுபடுவது, 2) தான் செய்த தவறுக்காக வருந்தி பாவமன்னிப்பு கேட்பது, 3) இனி ஒருபோதும் தவறு செய்யமாட்டேன் என சபதம் எடுப்பது. இம்மூன்று வழிகளை ஒருவன் ஒழுங்காக கடைப்பிடித்தால் அவனை இறைவன் மன்னித்து விடுகின்றான்.

ஒரு முஸ்லிம் சகமனிதருக்கு துரோகம் செய்தாலோ, தவறிழைத்தாலோ அதுவும் பாவம். இந்த பாவத்திலிருந்து விடுபட நினைப்பவர் மேற்கூறப்பட்ட மூன்று வழிகளையும் கடைப்பிடிப்பதுடன் நான்காவது காரியமாக தவறிழைக்கப்பட்ட மனிதரிடம் சென்று தவறுக்கு தக்கவாறு பரிகாரம் தேடவேண்டும்.

பொருள் ரீதியாக துரோகம் செய்தால், அந்தப் பொருளை திரும்ப ஒப்படைத்துவிட வேண்டும்; உடல்ரீதியாக தவறிழைத்தாலோ, உளரீதியாக காயம் ஏற்படுத்தினாலோ, அதற்குரிய பரிகாரம் என்னவோ அதை நிறைவேற்றி நிவாரணம் தேடிக்கொள்ள வேண்டும். மனந்திருந்தி தவறுகளிலிருந்து விலகி நிற்கும் பக்குவத்தை புனித ரமலான் கற்றுத் தருகிறது.

மனந்திருந்தி மனிதப்புனிதனாக வாழ, ரமலானில் அதிகமாக இறைவனிடம் இறைஞ்ச வேண்டும் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு வற்புறுத்துகிறது:

‘இறைநம்பிக்கையாளர்களே, கலப்பற்ற மனதுடன் இறைவனிடம் மனந்திருந்தி பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்களின் பாவங்களை உங்களை விட்டுப்போக்கி, உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டே இருக்கும்’ (திருக்குர்ஆன் 66:8)

“நபி (ஸல்) அவர்கள் ஒரு நாளைக்கு எழுபதுக்கும் அதிகமான தடவை ‘இறைவா! நான் உன்னிடம் பாவமன்னிப்பு வேண்டி, மனந்திருந்தி வருகிறேன்’ என்பதை ஓதி வருவார்கள்”. (அறிவிப்பாளர்: அபூ ஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

‘ஒரு மனிதன் (பயணத்தினிடையே) ஓய்வெடுக்க ஓரிடத்தில் இறங்கினான். அந்த இடத்தில் அவனுக்கு (உணவோ, தண்ணீரோ கிடைக்காது என்பதால்) ஆபத்து இருந்தது. அவனது உணவும், பானமும் வைக்கப்பட்டிருந்த அவனது வாகனப் பிராணியும் அவனுடன் இருந்தது. அப்போது அவன் தலையைக் கீழே வைத்து ஒரு குட்டித் தூக்கம் தூங்கி எழுந்தான். அந்தநேரத்தில் அவனது வாகனப் பிராணி தப்பி ஓடிப் போயிருந்தது. எனவே அவன் அதைத் தேடிப் புறப்பட்டான். அப்போது அவனுக்குக் கடுமையான வெப்பமும், தாகமும், அல்லது அல்லாஹ் நாடிய கஷ்டம் ஒன்று ஏற்பட்டது. அவன், ‘நான் முன்பிருந்த அதே இடத்திற்குத் திரும்பிச் செல்கிறேன்’ என்று கூறியவாறு திரும்பிச் சென்றான். பிறகு ஒரு குட்டித் தூக்கம் தூங்கி, பிறகு தன் தலையை உயர்த்தினான். அப்போது தப்பிப்போன தனது பிராணி தன்னருகில் இருப்பதைக் கண்டு அவன் எந்தளவு மகிழ்வானோ, அதைவிடத் தன் அடியான் மனந்திருந்தி தவறுகளிலிருந்து விலகி இறைவனிடம் பாவமன்னிப்பு வேண்டும்போது அல்லாஹ் அதிகம் மகிழ்கிறான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி)

புனித ரமலானில் மனந்திருந்தி தவறுகளிலிருந்து விலகி நிற்போம். இறையருள் பெறுவோம்.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

இப்தார்: மாலை 6.38 மணி

நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.29 மணி
Tags:    

Similar News