உள்ளூர் செய்திகள்
அமைச்சர் ராமச்சந்திரன்

நீலகிரியில் 23,179 பேருக்கு விரைவில் பூஸ்டர் தடுப்பூசி - அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

Published On 2022-01-11 09:36 GMT   |   Update On 2022-01-11 09:36 GMT
நீலகிரி மாவட்டத்தில் 23,179 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் குன்னூர்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான முன் னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை  அமைச்சர் ராமசந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். 

பின்னர் முதல் நபராக முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.  மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் ராமச்சந்திரன்  பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் 75 முகாம்களில் 300 பணியாளர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுவர். 2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 39 வாரங்கள்அல்லது 273 நாள்கள் அல்லது 9 மாதங்கள் முடிவடைந்த பிறகு இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.

 நீலகிரி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் 4,457 பேருக்கும், முன்களப் பணியாளர்கள் 7,083 பேர்,  60 வயதுக்கு மேல் இணைநோய் உள்ளவர்கள் 11,639 பேர்  என மொத்தம் 23,179 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசியானது முற்றிலும் பாதுகாப்பான தாகும். மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 32,469 பேருக்கு முதல் தவணையும், 5 லட்சத்து 7,834 பேருக்கு 2-ம் தவணையும் என மொத்தம் 10 லட்சத்து 40,303 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, மாவட்டத்தில் 1,130 படுக்கை வசதிகள் கொரோனா சிகிச்சை மையத்திலும், 600-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

மாவட்டத்தில் உள்ள எல்லையோர சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது.  இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.  இவ்வாறு அவர் கூறினார். 

 முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர்  கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சித் தலைவர்  பொன்தோஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News