ஆன்மிகம்
ஆஞ்சநேயர் சிலைக்கு அபிஷேகம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு அபிஷேகம்

Published On 2021-01-15 05:03 GMT   |   Update On 2021-01-15 05:03 GMT
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது.

இங்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். ஆஞ்சநேயர் சாமிக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

நேற்றுமுன்தினம் அமாவாசை தினம் வந்ததால், ஜெயந்தி விழா சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மட்டும் கொண்டாடப்படவில்லை. அதற்கு பதிலாக மூலநட்சத்திரம் நேற்றும் வந்ததால் கேரள பஞ்சாங்க முறைப்படி நேற்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா தாணுமாலயசாமி கோவிலில் கொண்டாடப்பட்டது.

அதன்படி அதிகாலை 5 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகம், காலை 8 மணிக்கு 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், பால், தயிர், களபம், சந்தனம், குங்குமம், பச்சரிசி மாவு, எலுமிச்சை பழம் சாறு, கரும்புச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், மாதுளைச் சாறு, தேன், விபூதி உள்பட 16 வகையான பொருட்கள் அடங்கிய சோடசஅபிஷேகம் நடைபெற்றது.

இந்த அபிஷேகத்தை காண அதிகாலையிலேயே திரளான பக்தர்கள் சுசீந்திரத்திற்கு வந்தனர். முன்னதாக நீலகண்டசாமி கோவிலில் இருந்து மேளதாளத்துடன் அபிஷேக பொருட்கள் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் மற்றும் பக்தர்களால் கொண்டு வரப்பட்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடந்தது.

நண்பகல் 12 மணிக்கு விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார். மாலையில் ஆஞ்சநேயருக்கு பஜனையும், சந்தனகாப்பு அலங்காரத்துடன் பிச்சி, மல்லிகை, ரோஜா, தாமரை, பச்சை, கனகாம்பரம், சிவந்தி, முல்லை, கொழுந்து, மருக்கொழுந்து, துளசி உள்பட பலவகை மலர்களால் புஷ்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, கோட்டாட்சியர் மயில், அறங்காவலர் குழு தலைவர் சிவ குற்றாலம், உறுப்பினர்கள் அழகேசன், ஜெயச்சந்திரன், சதாசிவம், குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ. அசோகன், குமரி கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட விவசாய அணி பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய துணை தலைவர் சாஜின்காந்தி, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அவைத்தலைவர் தம்பித்தங்கம், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கந்தன், ஒன்றிய செயலாளர் குமரகுரு, பேரூர் செயலாளர் குமார், கிளைச்செயலாளர் மணி, நிர்வாகிகள் சுரேஷ், கோபால் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கொரோனா விதிகளை கடைபிடிப்பது தொடர்பாக பேரூராட்சி அலுவலகத்தின் வெளியே ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும், கைகளை சுத்தம் செய்த பிறகு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும், முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

மேலும் முககவசம் அணியாமல் வந்த சில பக்தர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வினியோகம் செய்யப்பட்டது.
Tags:    

Similar News