செய்திகள்
கமல்ஹாசன்

5-வது கட்டமாக கோவையில் இன்று மாலை கமல்ஹாசன் பிரசாரம்

Published On 2021-01-10 07:24 GMT   |   Update On 2021-01-10 07:24 GMT
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் 5-வது கட்டமாக கோவையில் இன்று மாலை தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

கோவை:

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றிநடை போடும் தமிழகம் என்ற பெயரிலும், மு.க.ஸ்டாலின் மக்கள் கிராம சபை கூட்டங்களிலும் பங்கேற்று பேசி வருகின்றனர்.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த டிசம்பர் 13-ந் தேதி மதுரையில் தனது பிரசாரத்தை தொடங்கினார். இதுவரை 4-கட்டமாக பிரசாரம் நடத்தி முடித்துள்ள கமல்ஹாசன் 5-வது கட்டமாக கோவையில் இன்று மாலை தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

இதற்காக பிற்பகல் 3 மணியளவில் சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வரும் கமல்ஹாசனுக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து நிருபர்களுக்கு கமல்ஹாசன் பேட்டியளிக்கிறார்.

பேட்டி முடிந்ததும் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்லும் கமல்ஹாசன் அங்கு நடக்கும் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு திறந்த வேனில் மசாக்காபாளையத்தில் தனது பிரசாரத்தை தொடங்கும் கமல்ஹாசன் அதனை முடித்து விட்டு, 6 மணிக்கு புளியகுளம் விநாயகர் கோவில் சந்திப்பிலும், 6.30-க்கு காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டிலும் பிரசாரம் மேற்கொள்கிறார். அங்கிருந்து லாலிரோடு வழியாக பி.என்புதூர் சென்று பஸ் நிறுத்தத்தில் பிரசாரம் செய்கிறார்.

இரவு 7.45 மணிக்கு மாதம்பட்டி பிரிவிலும், 8.30 மணிக்கு செல்வபுரம் சிவாலாயா தியேட்டர் முன்பும், 9 மணியளவில் ராஜா தேர்மூட்டியிலும் மக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசுகிறார். இத்துடன் முதல் நாள் பிரசாரத்தை முடித்து கொள்ளும் கமல்ஹாசன், கட்சி நிர்வாகி வீட்டில் தங்குகிறார்.

நாளை 2-வது நாளாக காலை 11 மணிக்கு துடியலூர் எம்.டி.பி. ஜங்‌ஷனில் பிரசாரத்தை தொடங்கும் கமல்ஹாசன், அதனை தொடர்ந்து அன்னூர் பஸ் நிலையத்தில் பிரசாரத்தை முடித்து விட்டு, மதியம் 1.15 மணிக்கு திருப்பூர் மாவட்டம் அவினாசிக்கு சென்று பிரசாரம் மேற்கொள்கிறார். மாலை 4 மணிக்கு சி.டி.சி. பஸ் நிலையம், 4.15 மணியளவில் பழைய பஸ் நிலையம், 4.30 மணிக்கு புஷ்பா தியேட்டர் ரவுண்டானா, 4.45 மணிக்கு அனுப்பர்பாளையம் புதூரிலும், 5 மணிக்கு பாண்டியன் நகர் பஸ்நிலையம், 5.30 மணிக்கு பெருமாநல்லூர், 5.45 மணிக்கு குன்னத்தூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். குன்னத்தூரில் பிரசாரத்தை முடித்து விட்டு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்திற்கு செல்லும் கமலஹாசன் அங்கு பிரசாரத்தை முடித்து விட்டு 12-ந் தேதி மீண்டும் திருப்பூர் மாவட்டம் காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை, பொள்ளாச்சியில் பிரசாரம் செய்கிறார்.

பின்னர் இரவில் பொள்ளாச்சியில் உள்ள காந்தம் மஹாலில் மக்களுடன் கலந்துரையாடுகிறார்.

13-ந் தேதி காலை 11 மணியளவில் கோவை தாஜ் ஓட்டலில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் கமல்ஹாசன், அதன்பின்னர் சுந்தராபுரம், மதுக்கரை பகுதிகளில் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதனை தொடர்ந்து செல்வம் மஹாலில் கட்சி தொண்டர்களை சந்திக்கிறார். அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்து விட்டு 13-ந் தேதி இரவு சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

Tags:    

Similar News