செய்திகள்
தேவூர் அருகே சரபங்கா நதியில் விவசாயிகள் வெண்டைக்காய்களை கொட்டி உள்ளதை படத்தில் காணலாம்.

வெண்டைக்காய்களை சரபங்கா நதியில் கொட்டிய தேவூர் விவசாயிகள்

Published On 2020-11-22 01:56 GMT   |   Update On 2020-11-22 01:56 GMT
விலை வீழ்ச்சியால் கவலை அடைந்த தேவூர் பகுதி விவசாயிகள் வெண்டைக்காய்களை சரபங்கா நதியில் கொட்டினர்.
தேவூர்:

சேலம் மாவட்டம் தேவூர் பகுதியில் அரசிராமணி, செட்டிபட்டி, குள்ளம்பட்டி, மூலப்பாதை, குஞ்சாம்பாளையம், தண்ணிதாசனூர், ஒக்கிலிப்பட்டி, பூமணியூர், பொன்னம்பாளையம், மோட்டூர், ஒடசக்கரை, சென்றாயனூர், சோழக்கவுண்டனூர், மேட்டுப்பாளையம் உள்பட பல்வேறு கிராமங்களில் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது அவை அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

இதைத்தொடர்ந்து விவசாயிகள், தொழிலாளர்களை பயன்படுத்தி வெண்டைகாய்களை அறுவடை செய்து, விற்று வருகிறார்கள். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ.30-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.3-க்கு விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். இந்த விலை வீழ்ச்சி விவசாயிகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

இதுகுறித்து வெண்டைக்காய் விவசாயிகள் கூறியதாவது:-

தேவூர் பகுதியில் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து ஒரு விலையை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் இருந்து வெண்டைக்காய்களை கொள்முதல் செய்து, கேரள மாநிலத்துக்கு அனுப்பி வருகின்றனர். தற்போது மகசூல் அதிகரித்துள்ளதால் வெண்டைக்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது ஒரு கிலோ வெண்டைக்காயை ரூ.3-க்கு கொள்முதல் செய்கிறார்கள். இதனால் எங்களுக்கு லாபம் கிடைக்கவில்லை. கடும் நஷ்டமே ஏற்பட்டுள்ளது. இதனால் வெண்டைக்காய்களை அறுவடை செய்த விவசாயிகள் சாலைகளிலும், நீர்நிலைகளிலும் கொட்டி வருகிறார்கள்.

மேலும் ஒரு சில இடங்களில் விவசாயிகளிடம் இருந்து வெண்டைக் காய்களை விலை கொடுத்து வாங்க வியாபாரிகள் வரவில்லை. இதனால் அரசிராமணி செட்டிபட்டி பாலம் பகுதியில் வெண்டைக்காய் களை சில விவசாயிகள் சரபங்கா நதியில் கொட்டி உள்ளனர். இதனால் ஆற்று தண்ணீரில் வெண்டைக்காய்கள் அடித்து செல்வதை காணமுடிகிறது. எனவே வெண்டைக்காய்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News