செய்திகள்
காவிரி ஆறு

மேகதாது அணை பிரச்சினை- சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு?

Published On 2021-07-10 06:55 GMT   |   Update On 2021-07-10 06:55 GMT
பெரும்பாலான கட்சிகள் மேகதாது அணை கட்டுவதை தவிர்க்க தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தி வருகின்றன.
சென்னை:

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழக அரசு இந்த அணையை கட்டக்கூடாது என்று தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதுதொடர்பாக சமீபத்தில் டெல்லி சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார்.

என்றாலும் மேகதாது பகுதியில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடகா கூறி வருகிறது. அதை தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சமீபத்தில் அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசிடம் தெரிவிக்காமல் கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று மத்திய அரசு சார்பில் உறுதிமொழி வழங்கப்பட்டது.

இந்த நிலையிலும் கர்நாடகா தொடர்ந்து மேகதாதுவில் அணை கட்டும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. இதையடுத்து மேகதாது அணை விவகாரம் பற்றி விவாதிக்க நாளை மறுநாள் (12-ந்தேதி) சட்டசபை அனைத்து கட்சி கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ளார்.

தமிழகம், கர்நாடகா இடையே நிலவும் நதிநீர் பிரச்சினைக்கு அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக இந்த அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார். இந்த கூட்டத்தில் சட்டசபையில் உள்ள 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். அந்த 13 கட்சிகள் விவரம் வருமாறு:-

1. தி.மு.க., 2. அ.தி.மு.க., 3. காங்கிரஸ், 4. பா.ம.க., 5. பா.ஜ.க., 6. இ.கம்யூ., 7. மார்க். கம்யூ., 8. விடுதலை சிறுத்தை. 9. கொங்கு தேசிய மக்கள் கட்சி, 10. புரட்சி பாரதம், 11. ம.தி.மு.க., 12. தமிழக வாழ்வுரிமை கட்சி, 13. மனித நேய மக்கள் கட்சி.

நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு தலைமை கழகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த 13 கட்சி பிரதிநிதிகளும் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது தமிழக அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்யப்படுகிறது.

பெரும்பாலான கட்சிகள்
மேகதாது அணை
கட்டுவதை தவிர்க்க தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தி வருகின்றன. அது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

என்றாலும் கர்நாடகத்தில் அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த தமிழகத்துக்கு சட்டப்பூர்வமான வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே சட்டசபை அனைத்து கட்சி கூட்டத்தில் எந்தவிதமான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது பற்றி தீவிரமாக ஆலோசிக்கப்படும்.



சட்டசபை அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசித்து எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
தமிழக அரசு
சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக அரசு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளபோதிலும் பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்குவது உள்பட பல்வேறு பணிகளுக்காக மேகதாதுவில் அணை கட்டுவது அவசியம் என்று கர்நாடகா தொடர்ந்து கூறி வருகிறது. எனவே சுப்ரீம் கோர்ட்டு மூலம் சென்றால் மட்டுமே கர்நாடகாவில் அணை கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியும் என்று கருதப்படுகிறது.

இதற்கிடையே தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் தங்களை மேகதாது அணை
விவகாரம் தொடர்பாக விவாதிக்கும் கூட்டத்திற்கு அழைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் இதுதொடர்பாக கூறுகையில், 2018-ம் ஆண்டு காவிரி பிரச்சினை உச்சத்துக்கு சென்றபோது அப்போதைய அரசு விவசாயிகளை அழைத்து பேசியது. அதேபோன்று இப்போதும் விவசாயிகளுக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டம் 3-வது வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மேகதாது அணை கட்டும் விவகாரத்துக்கு அதிரடி நடவடிக்கைகள் மூலம் முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. எனவே நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிறகு முக்கிய முடிவு வெளியாகும் என்று தெரிகிறது.


Tags:    

Similar News