உள்ளூர் செய்திகள்
மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன் கோவில் பகுதியில் மஞ்சள் குலைகள் விற்பனை நடைபெறுகிறது.

மதுரையில் களைகட்டிய பொங்கல் பொருட்கள் விற்பனை

Published On 2022-01-12 11:00 GMT   |   Update On 2022-01-12 11:00 GMT
மதுரையில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியது-. பனங்கிழங்கு, மஞ்சள், கரும்பு மட்டுமின்றி காய்கறிகளையும் பொதுமக்கள் ஆர்வமாக வாங்கினர்.
மதுரை

பொங்கல் பண்டிகை நாளைமறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் மதுரையில் கரும்பு கட்டுகள், பனங்கிழங்கு, மஞ்சள் குலைகள் குவிந்துள்ளன. பொதுமக்களும் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க மார்க்கெட்டுகளில் அதிகளவில் திரண்டுள்ளதால் விற்பனை சூடு பிடித்துள்ளது.

தை திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள்(14-&ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக பொங்கல் பண்டிகையை கொண்டாட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பொங்கல் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரவர் வீடுகளில் பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். இதற்காக பொருட்களை வாங்க கிராம மக்கள் நகர் பகுதிகளில் குவிய தொடங் கியுள்ளனர்.

மதுரையை பொருத்தவரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தற்போது மதுரை மார்க்கெட் வீதிகளில் சுற்றி வந்து தங்களுக்கு தேவையான பொங்கல் பொருட்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

யானைக்கல், நெல்பேட்டை, கீழமாசிவீதி, காமராஜர் சாலை, விளக்குத்தூண், மேலமாசி வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் பொங்கல் பொருட்களை வாங்கி வருவதால் கூட்டம் அதிகரித்துள்ளது. 

கீழ மாசி வீதிகளில் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் யானைக்கல் பகுதிகளில் கரும்பு, பனங்கிழங்கு மஞ்சள் குலைகள் குவித்து வைக்கப்பட்டு வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மஞ்சள் குலைகள் 30 முதல் 50 ரூபாய்க்கும், பனங்கிழங்கு ஒரு கட்டு 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

15 கரும்புகள் அடங்கிய ஒரு கட்டு ரூ.400 வரை விற்கப்படுகிறது. மேலும் பொங்கலுக்கு வீடுகளில் கட்டப்படும் சாமந்தி பூ விற்பனையும் மதுரையில் களைகட்டியுள்ளது. மார்க்கெட் பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள சாமந்திப்பூக்களையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகிறார்கள். மேலும் சீர் கொடுப்பதற்கு தேவையான ஜவுளி, பாத்திரங்கள் வாங்குவதற்கு அதிகளவில் பொதுமக்கள் திரண்டதால் விளக்குத்தூண் பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது.

பூஜை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்கவும் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால் உழவர் சந்தை மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில் வழக்கத்தைவிட அதிகமானோர் ஆர்வத்துடன் காய்கறிகளை வாங்கி வருகிறார்கள். பழக்கடைகளிலும் விற்பனை அதிகரித்துள்ளது. 

தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விற்பனை சற்று மந்தமாக இருப்பதாக வியா பாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் மதுரை பகுதிகளில் பொங்கல் பண்டிகை விற்பனை களை கட்டியுள்ளது. இன்றும் நாளையும் ஏராளமான பொதுமக்கள் மதுரை கடைகளில் பொங்கல் பொருட் களை வாங்குவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் முக்கியமான பகுதிகளில் போலீசாரின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News