செய்திகள்
சிறுநீர் பிரச்சினையை தீர்க்கும் யோக முத்திரை

ஆரோக்கியம் நம் கையில் - சிறுநீர் பிரச்சினையை தீர்க்கும் யோக முத்திரை

Published On 2021-11-17 13:51 GMT   |   Update On 2021-11-17 13:51 GMT
சிறுநீர் பிரச்சினையை தீர்க்கும் யோக முத்திரைகள் தொடர்பாக யோகக் கலைமாமணி பி.கிருஷ்ணன் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
இன்று நிறைய நபர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படுகின்றது. - இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் 40 வயதை தாண்டியவர்களுக்கு அதிகம் உள்ளது.  இதனால் ஒரு இடத்திற்கு பஸ்சில் பயணம் செல்வதில் சிரமம் ஏற்படுகின்றது.  எப்பொழுதும் ரயில் பயணத்தையே சார்ந்து இருக்கவேண்டியுள்ளது.  அதுமட்டுமல்ல இரவில் அடிக்கடி சிறுநீர் வருவதால் இரவு தூக்கம் கெடுகின்றது.  தூக்கம் கெடுவதால் மறு நாள் காலை வழக்கம்போல் உடல் சுறுசுறுப்பாக இருக்க முடியவில்லை.  மனம் அமைதி கெடுகின்றது.  இதற்காக மருத்துவ சிகிச்சை எடுத்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் நிரந்தர தீர்வு இல்லை என்றே சொல்லவேண்டும்.  ஆனால் இதற்கு தீர்வு, மருந்து உங்களிடமே உள்ளது என்றால் ஆச்சரியப்படுவீர்கள். ஆம், இது உடல் மனம் சம்பந்தமான பிரச்சினை ஆகும்.

மனதில் கவலை, டென்ஷன், கோபம், பதட்டம், மன அழுத்தம், குறிப்பாக பயம் அதிகம் இருந்தால் - சிறுநீரகம், சிறுநீரகப்பைக்கு சக்தி ஓட்டம் குறையும்.  எனவே முதலில் நாம் இந்த பிரச்சினைகளுக்கு  சரி செய்யவேண்டியது நமது மனமாகும்.  இதற்கு யோக சிகிச்சை முத்திரை மூலம் மனதை அதில் எழும் எண்ணங்களை சரி செய்துவிடலாம்.

சிறுநீரகம், சிறுநீரகப்பை நன்கு இயங்க செய்யும் எளிய யோக பயிற்சிகள் உள்ளன, அதனை ஒரு நாற்காலியில் அமர்ந்தே செய்து சரிபடுத்தலாம்.  மிக எளிய பயிற்சி தான், இதன் மூலம் உடலை,  உடல் உள் உறுப்பை சிறப்பாக இயங்கச் செய்யலாம்.
முத்திரை என்பது நமது கை விரல்களை வைத்து செய்யும் யோக பயிற்சியாகும்.  மனித உடல் பஞ்ச பூதங்களினால் ஆனது.   நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று. இதன் தன்மைகள் ஒவ்வொரு செல்லிலும் உள்ளது.  இந்த பஞ்ச பூத கட்டுப்பாடு நமது கை விரல் நுனிகளில் உள்ளது.  கை விரல் நுனிகளை இணைப்பதின் மூலம் உடலுக்குள் உள்ள ஒவ்வொரு உறுப்பிற்கும் சக்தி கிடைக்கின்றது.  அதில் உள்ள குறைபாடு சரிசெய்யப்படுகின்றது.  நாம் நீர் மூலகம் சரி செய்யும் முத்திரை செய்தால் சிறுநீரகம், சிறுநீரகப்பை நன்கு சக்தி பெற்று இயங்கும்.
 
ஆனால் மனிதர்கள் பிறந்தது முதல் இன்று வரை மருத்துவம், மாத்திரை, ஊசி என்று வாழ்ந்துவருவதால் தனது உடலை, உள் உறுப்புகளை சரிசெய்யும் சக்தி தன்னிடமுள்ளது என்பதை நம்புவதில்லை.  ஒவ்வொரு மனிதனும் தனக்குள் இருக்கும் இயற்கை சக்தியை, உயிர் சக்தியை, ஆத்ம சக்தியை, பிரபஞ்ச சக்தியை உணர வேண்டும். அதுவே யோக முத்திரை தியான பயிற்சியாகும்.   மாத்திரைக்குள் என்ன உள்ளது என்பது தெரியாது. அதை சாப்பிட்டால் குணமாகும் என்ற நம்பிக்கைதான் வேலைசெய்யும்.   அந்த நம்பிக்கையை உங்களுக்குள் உள்ள உயிரில் வையுங்கள்.  அது நமது உடலில் ஐந்தாவது அடுக்கில் உள்ளது.  நமது உணர்வு விரிவடைந்து  ஐந்தாவது அடுக்கில் உள்ள ஆத்மாவுக்கு சென்று அதன் சக்தியை உடல் முழுக்க பரவச் செய்யும் அற்புத கலைதான்  யோக முத்திரையாகும்.

ஜலோதர நாசிக் முத்திரை

விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  விரிப்பில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.  கண்களை மூடி இருபது வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும்.  பின்  சுண்டு விரலை மடித்து அதன் நகக்கண்ணில் கட்டை விரலை வைக்கவும்.  படத்தை பார்க்கவும்.  இரு கைகளிலும்  செய்யவும்.  இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.  பின் கண்களை திறந்து கைகளை சாதாரணமாக வைக்கவும்.  காலை,  மாலை இரு வேளை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.  

பிராண முத்திரை



விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  விரிப்பில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.  கண்களை மூடி இருபது வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும். பின் மோதிரவிரல்&சுண்டுவிரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலால் தொடவும்.  இரு கைகளிலும் பயிற்சி செய்யவும்.  இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.  காலை, மதியம், மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.  இரவு படுக்கும் முன் இரண்டு நிமிடம் இந்த முத்திரையை பயிலவும்.  இந்த முத்திரையை மட்டும் இரவு படுக்கும் முன் செய்துவிட்டு படுக்கவும்.  இரவு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை விரைவிலேயே மாறும்.

சக்தி முத்திரை



விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக் கட்டும்.  விரிப்பில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.  கண்களை மூடி இருபது வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக் கவும். பின் கட்டை விரலை மடக்கி உள்ளங்கைக்குள் வைத்து அதன் மேல் ஆள்காட்டி விரலையும் நடு விரலையும் வைக்கவும்.  மோதிரவிரலும் சுண்டு விரல் நுனியும் படத்தில் உள்ளது போல் நுனிகளை தொடவும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும். பின் சாதாரணமாக கைகளை வைக்கவும்.

நாற்காலியில் நவாசனம்

ஒரு நாற்காலியில் அமரவும், நாற்காலியில், சற்று  முன் அமர்ந்து இரு கால்களையும் மெதுவாக படத்தில் உள்ளது போல் நீட்டவும்.  இரு கைகளினால் கால் முட்டு பக்கத்தில் பிடித்துக்கொள்ளவும்.  பத்து வினாடிகள் முதல் இருபது வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக காலை தரைக்கு கொண்டு வரவும்.  இதே போல் மூன்று தடவைகள் பயிற்சி செய்யவும்.  காலை, மாலை சாப்பிடுமுன்  இரண்டு முறைகள் பயிலவும்.

மூலாதார தியானம்



நிமிர்ந்து உட்காரவும், முது கெலும்பு நேராக இருக் கட்டும்.  இயல்பாக நடக்கும் மூச்சை ஒரு இரு பது வினா டிகள் தியானிக் கவும்.  பின் மிக மெதுவாக இரு நாசிவழியாக  மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.  பத்து முறைகள் செய்யவும்.   பின்  உங்களது மனதை முதுகுத்தண்டின் கடைசி கீழ் பகுதி உள் பகுதியில் நிலைநிறுத்தவும்.  இயல்பாக நடக்கும் மூச்சை அந்த இடத்தில் நிலை நிறுத்தவும். நல்ல பிராண சக்தி அந்த இடத்தில் கிடைப்பதாக எண்ணவும். ஐந்து நிமிடம் உங்களது உணர்வை முதுகு தண்டு கடைசி உள் பகுதியில்  நிலை நிறுத்தவும்.  பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும்.
இந்த மூலாதார சக்கரா தியானம் கோனாடு சுரப்பியை கட்டுப்படுத்துகின்றது.  கோனாடு சுரப்பி சிறுநீரகம், சிறுநீரகப்பையை கட்டுப்படுத்துகின்றது.  இந்த இடத்தில் தியானம் செய்யும் பொழுது மூச்சை நினைக்கும் பொழுது நல்ல பிராண சக்தி அந்த சக்கரத்திற்கு கிடைக்கும்.  அதனால் சிறுநீரகம் நன்கு பிராண சக்தி பெற்று இயங்குகின்றது.  அடிக்கடி சிறுநீர் கழிப்பது சரி செய்யப்படுகின்றது.

உணவு: வாரம் ஒரு முறை வாழைப்பூ, வாழை தண்டு உணவில் மருந்தாக பொரியல் செய்து சாப்பிடுங்கள்.  கொய்யாப்பழம் உணவில் எடுத்துக்கொள்ளுங்கள்.  மாதுளை பழம், கருப்பு திராட்சை, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை, அவரைக்காய், முட்டைகோஸ், பீட்ரூட், முருங்கைக்கீரை உணவில் அடிக்கடி எடுக்கவும்.  வெள்ளரிக்காய், பூசணி, சுரைக்காய் உணவில் எடுக்கவும்.  தாகம் எடுக்கும் பொழுது தண்ணீர் குடியுங்கள்.  இளநீர் வாரம் ஒரு முறை சாப்பிடுங்கள்.  எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது உப்பு சேர்த்து சாப்பிடவும், வாரம் ஒரு நாள் மட்டும் சாப்பிடவும்.

நமது அன்றாட வாழ்க்கையில் மூலாதார தியானம்

காலை முதல் இரவு வரை உழைத்துக் கொண்டே இருக்கின்றோம்.  நிறைய நபர்களுக்கு நேரம் கிடைப்பது ஒரு பெரிய கேள்விக் குறியாக இருக்கின்றது.  அவர்கள் நேரம் கிடைக்கும் பொழுது, அலுவலகம், பஸ்சில் அல்லது காரில் செல்லும்பொழுது கண்களை மூடி உங்களது மனதை, மூச்சை முதுகுத்தண்டின் கடைசி கீழ்ப்பகுதியில் வைத்து ஐந்து நிமிடம் தியானிக்கவும்.  யாரையாவது பார்ப்பதற்கு சென்றால், காத்திருக்க சொன்னால், அமர்ந்திருக்கும் பொழுது மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.  பின் கண்களை திறந்தவாரே உங்களது மூச்சை, உணர்வை முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் வைத்து தியானிக்கவும்.  

இரவு படுப்பதற்கு முன்பாக விரிப்பில் அமர்ந்து கண்களை மூடி பிராண முத்திரையில் உங்களது உணர்வை முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் வைத்து ஐந்து நிமிடம் தியானிக்கவும்.  காலை எழுந்தவுடன் இதே போல் ஐந்து நிமிடம் தியானிக்கவும்.  அலுவலகத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன்பு சென்றால் அந்த நேரத்தை நாற்காலியில் அமர்ந்து முதுகு தண்டின் கடைசி உள் பகுதியில் வைத்து ஐந்து நிமிடம் தியானிக்கவும்.  நல்ல பிராண சக்தி அந்த இடத்தில் கிடைப்பதாக எண்ணவும்.  இப்படி கிடைக்கின்ற நேரத்தை சரியாகப் பயன்படுத்தினால் ஒரு நாளில் பத்து முறை இந்த மூலாதார சக்கரா தியானத்தை நம்மால் செய்ய முடியும்.  நிச்சயம் சிறுநீரகம், சிறு நீரகப்பை நன்கு இயங்கும்.காலை 6 மணி முதல் 6 .20  மணிக்குள் சூரிய தியானம்
காலை 6 மணிக்கு சூரியன் உதயமாகி வரும்பொழுது சூரிய ஒளி நமது உடலில் படும்படி அமர்ந்து சக்தி முத்திரையில் இருக்கவும்.  இதனை வாரம் மூன்று நாட்கள் சூரிய ஓளி மேல்படும்படி பயிற்சி செய்யவும்.

இதேபோல் மாலை சூரியன் மறையும் நேரம் 5 .30  மணி முதல் 6  மணிக்குள் சூரிய ஓளி உடம்பில் படும்படி பிராண முத்திரையை மட்டும் செய்யவும்.  சூரிய ஓளி நமது உடலில் படும்படி ஒரு முத்திரையை பயிற்சி செய்யும் பொழுது மிக நல்ல பலன் கிடைக்கும்.  நமது உடலில் உள்ள கழிவுகள் சரியாக வெளியேறும்.  உடல் இயக்கம் நன்றாக இருக்கும்.  

அந்த காலத்தில் வெயிலில் அடிக்கடி நமது உடல் படும்படி வாழ்க்கைமுறை இருந்தது.  ஆனால் இப்பொழுது பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மீதும் பெரியவர்கள் மீதும் சூரிய ஓளி படுவதில்லை.  வீட்டிற்குள் கதவு, ஜன்னலை அடைத்து ஏ.சி  ரூமில் வேலை, இதனால் உடலில் ராஜ உறுப்புக்களான சிறுநீரகம், இதயம், கல்லீரல், மண்ணீரல் சக்தி இழக்கின்றது.  எனவே முடிந்த அளவு பத்து நிமிடமாவது  சூரிய ஓளி உடலில் படும்படி வாழுங்கள்.  ஞாயிறு விடுமுறையெனில்  காலை, மாலை சூரிய ஓளி உடலில் படும்படி உடற்பயிற்சி, யோகா செய்யுங்கள்.மேற்கூறிய யோகா முத்திரைப் பயிற்சியை தினமும் பயிலுங்கள்.  நிச்சயம் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறி வளமாக வாழலாம்.
Tags:    

Similar News