செய்திகள்
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம்.

9 மாவட்ட அ.தி.மு.க.வினருடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

Published On 2021-08-11 06:08 GMT   |   Update On 2021-08-11 08:55 GMT
அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெற ஒவ்வொரு தொண்டரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.
சென்னை:

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக, உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்தலை அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் செப்டம்பர் 15-ந்தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இதையொட்டி வாக்காளர் பட்டியலை தயார் செய்வது, வாக்குச்சாவடிகள் அமைப்பது ஆகியவை தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளான கலெக்டர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளனர்.

இதற்காக 70 பக்கங்கள் கொண்ட கையேடுகளும் தேர்தல் கமி‌ஷனில் இருந்து வெளியிடப்பட்டு உள்ளன. இதையொட்டி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்ட உள்ளாட்சிகளுக்கு உதவித் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கும் பணி தொடங்கியுள்ளது. வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியும் நடந்து வருகிறது.

இதனால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
அ.தி.மு.க.
வை பொறுத்தவரை உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க கடந்த 5-ந்தேதி தலைமை கழகத்தில் ஆலோசனை கூட்டம் வைக்கப்பட்டு இருந்தது.


ஆனால் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் அன்றைய தினம் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) அ.தி.மு.க. தலைமை கழகத்தில் 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலையில் தலைமைக் கழகத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோர் வந்தனர்.

அவர்கள் முதலில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். இதில் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வெற்றி வாய்ப்பு நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க. இருப்பதால் பல்வேறு குறுக்கீடுகள் நமக்கு ஏற்படும். அதையெல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்.

கட்சி நிறுத்தும் வேட்பாளர்களை அனைவரும் ஏற்று அவரை வெற்றி பெற வைக்க வேண்டும். நாம் கடுமையாக பாடுபட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். ஒற்றுமையுடன் செயல்பட்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை தேடி தாருங்கள்.

தேர்தலின் போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் செய்யாதவற்றையையும் மக்களிடம் சுட்டி காட்டுங்கள்.

எனவே ஒவ்வொருவரும் வெற்றிக்காக பாடு பட வேண்டும். மனமாச்சரிங்களை கடந்து பணியாற்றுங்கள் என எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கேட்டுக்கொண்டனர்.

அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெற ஒவ்வொரு தொண்டரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதிக இடங்களில் வெற்றி பெற புதிய வியூகமும் வகுக்கப்பட்டது.

அப்போது மாவட்ட செயலாளர்கள் தேர்தல் பணிகளில் இதுவரை என்னென்ன செய்துள்ளோம் என்பது குறித்து விளக்கி கூறினார்கள்.

அதன் பிறகு ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இன்று மாலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்துகிறார்கள்.

அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நாளையும் (வியாழக்கிழமை) ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

முதலில் 3 நாட்கள் கூட்டம் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது 2 நாட்களில் ஆலோசனை கூட்டம் முடிக்கப்பட உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் குறித்து கடந்த 8-ந்தேதி தி.மு.க.வும் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தியது. அந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசும்போது, “100 சதவீத வெற்றியை பெற வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.

அதே போல் இப்போது அ.தி.மு.க. தலைமை கழகத்திலும் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு பெரிய கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

இன்று தலைமைக் கழகத்திற்கு வந்திருந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீடுகளில் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி வரும் சோதனை குறித்தும் ஆலோசித்தனர்.

தி.மு.க. அரசின் நடவடிக்கையை எதிர்கொள்வது குறித்தும் அவர்கள் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Tags:    

Similar News