உள்ளூர் செய்திகள்
நடுரோட்டில் பள்ளி மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட காட்சி.

நடுரோட்டில் பள்ளி மாணவர்கள் பயங்கர மோதல்- சமூகவலைதளங்களில் பரவும் வீடியோ காட்சியால் பரபரப்பு

Published On 2022-05-05 04:24 GMT   |   Update On 2022-05-05 04:24 GMT
மாணவர்களின் மோதல் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் சிலர் அதனை செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் தங்களது ஊர்களுக்கு செல்வதற்காக உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே வந்து நின்றனர். அப்போது திடீரென இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் சரமாரி தாக்கி கொண்டனர். ஒரு மாணவர் மற்றொரு மாணவரை பெல்ட்டால் சரமாரி தாக்கினார்.

நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இருப்பினும் மாணவர்கள் மோதலை கைவிடாமல் தொடர்ந்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டனர்.

ஒரு கட்டத்தில் மோதல் முற்றவே பொதுமக்கள் இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்தனர். அதன்பிறகு மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மாணவர்களின் மோதல் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் சிலர் அதனை செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த காட்சிகளை பார்த்த உடுமலை போலீசார் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் எந்த பள்ளியை சேர்ந்தவர்கள்? எதற்காக மோதலில் ஈடுபட்டனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

சமீப நாட்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பள்ளி மாணவர்கள் கோஷ்டியாக மோதி கொள்வது, ஆசிரியர்களை அவமானப்படுத்துவது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வந்தது. இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் உடுமலையில் பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் ஆசிரியர்கள், பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இதனை தடுக்க மாணவர்களுக்கு உளவியல் சிகிச்சை அளிப்பதுடன், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News