செய்திகள்
முக ஸ்டாலின்

அம்பேத்கரின் சமூக சிந்தனையே சட்ட உரிமையை நிலைநாட்டியது - மு.க.ஸ்டாலின் புகழாரம்

Published On 2021-04-14 11:53 GMT   |   Update On 2021-04-14 11:53 GMT
ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் உரிமை பெற அகில இந்திய அளவில் வழிகாட்டியாக அம்பேத்கர் இன்று வரை விளங்கி வருகிறார் என முக ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியா முழுவதும் வாழும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அனைத்துக்குமான ஒளி விளக்காகவும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடித்துக்கொடுத்து அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு அணையா விளக்காகவும் இருந்து இன்றும் வழிகாட்டி வரும் டாக்டர் அம்பேத்கரின் 130-ம் ஆண்டு பிறந்தநாள் அன்று அவரது நினைவைப் போற்றுவது நம் அனைவரின் கடமையாகும்.

ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் உரிமை பெற அகில இந்திய அளவில் வழிகாட்டியாக அவர் இன்று வரை விளங்கி வருகிறார். அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு, குடிமக்களின் உரிமைகளுக்குப் பலவகைகளில் பாதுகாப்பைத் தந்து வருகிறது.


அனைத்து மக்களுக்கும் சட்ட உரிமையை நிலை நாட்டக்காரணமாக அது அமைந்துள்ளது. அதன் மாண்பைச் சிதைக்க இன்றைய பா.ஜ.க. அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் அம்பேத்கரின் சட்டக் கட்டமைப்பை அவர்களால் அசைக்க முடியவில்லை.

‘’அரசியலில் கலந்து கொள்ளுங்கள். ஒரு சமூகத்தின் வலிமை அதன் விழிப்புணர்வு, கல்வி, சுயமரியாதை ஆகியவற்றில்தான் இருக்கிறது” என்றார் அவர். சுதந்திரமான மனிதர்களை உருவாக்கவே அம்பேத்கர் பாடுபட்டார்.

‘’விழிப்பான உணர்வு நிலையில் தனது உரிமைகள், பொறுப்புகள் மற்றும் கடமைகளை யார் உணர்ந்திருக்கிறார்களோ, அவர்களே சுதந்திரமான மனிதர்கள்” என்றார் அவர். அத்தகைய சுதந்திரமான சிந்தனை கொண்ட மனித சமுதாயம் அமைக்க உறுதி ஏற்போம்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News