செய்திகள்
ஆற்றில் மூழ்கியவர்களை தேடும் மீட்புக் குழுவினர்

துர்கா சிலையை கரைத்தபோது ஆற்றில் மூழ்கி 10 பேர் பலி

Published On 2019-10-09 03:19 GMT   |   Update On 2019-10-09 03:19 GMT
ராஜஸ்தான் மாநிலத்தில் துர்கா சிலையை கரைத்தபோது ஆற்றில் மூழ்கி 10 பேர் உயிரிழந்தனர்.
டோல்பூர்:

துர்கா பூஜையை முன்னிட்டு நாட்டின் பல்வேறு இடங்களில் பந்தல் அமைத்து துர்கா சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன. நவராத்திரி விழா நிறைவில், அந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.

அவ்வகையில், ராஜஸ்தான் மாநிலம் டோல்பூரில்  பிரதிஷ்டை செய்யப்பட்ட துர்கா சிலையை கரைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. துர்கா சிலயை பார்பதி நதியில் கரைத்தபோது, ஒரு சிறுவன் குளிப்பதற்காக ஆற்றில் குதித்துள்ளான். ஆனால் அவனால் நீந்தி கரையேற முடியாமல் ஆற்றில் மூழ்கினான். அவனை மீட்க மேலும் சிலர் குதித்துள்ளனர். அவர்களும் நீரில் மூழ்கி உள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பேரிடர் மீட்புக்குழுவினர், ஆற்றில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை நிலவரப்படி 10 பேரின் சடலங்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலரைக் காணவில்லை. அவர்களைத் தேடி வருகின்றனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாவட்ட கலெக்டர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Tags:    

Similar News