செய்திகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்- அமைச்சர் தகவல்

Published On 2021-09-28 09:34 GMT   |   Update On 2021-09-28 11:07 GMT
சர்க்கரை வியாதி, புற்றுநோய், ரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட வியாதிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மக்களை தேடி மருத்துவத்தில் சேர்க்கப்பட்டு மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு மருத்துவ கட்டமைப்பை பலப்படுத்துவது, பொதுமக்கள் அனைவரையும் சுகாதார வளையத்துக்குள் கொண்டு வருவது போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் மக்கள் ஆஸ்பத்திரிகளை தேடி செல்வதை மாற்றி மக்களை தேடி மருத்துவத்தை கொண்டு சேர்த்தார். இந்த திட்டத்தில் இப்போது 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

அந்த வரிசையில் மருத்துவத்தில் அடுத்த புரட்சிகரமான திட்டத்தை நாளை (புதன்கிழமை) தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்த புதிய திட்டம் பற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சாதாரண மக்களும் நோய் நொடியின்றி வாழ வேண்டும் என்பதற்காக வருமுன் காப்போம் என்ற அற்புதமான திட்டத்தை கலைஞர் ஆட்சியில் இருந்த போது 2006-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி பூந்தமல்லியில் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் பயன் அடைந்தார்கள்.

அ.தி.மு.க. ஆட்சியின் போது இந்த திட்டம் கைவிடப்பட்டது.

இப்போது இந்த திட்டம் கலைஞரின் வருமுன் காப்போம்
என்ற பெயரில் மீண்டும் தொடங்கப்படுகிறது.

இதற்கான அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். வருடத்துக்கு 1000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.



இந்த திட்டத்தை சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 1,250 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.

அதாவது தமிழகத்தில் 385 வட்டாரங்கள் உள்ளன. ஒரு வட்டாரத்துக்கு 3 முகாம்கள் வீதம் 1,155 முகாம்கள்.

ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் 20 மாநகராட்சிகளில் 80 முகாம்கள்.

சென்னை பெருமாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் 15 முகாம்கள். ஆக மொத்தம் 1,250 முகாம்கள்.

இந்த முகாம்களில் பொது மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், குடல் நோய் மருத்துவர், குழந்தை மருத்துவர், மகப்பேறு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், கண் மருத்துவர், பல் மருத்துவர், தோல் மருத்துவர், இருதய நோய் மருத்துவர், சிறுநீரக மருத்துவர், நரம்பியல் மருத்துவர், சித்த மருத்துவர் ஆகிய 15 சிறப்பு மருத்துவர்கள் இருப்பார்கள்.

பொதுமக்களை பரிசோதித்து உடலில் என்ன பிரச்சனை இருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு தேவையான சிகிச்சை வழங்கப்படும்.

ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

சர்க்கரை வியாதி, புற்றுநோய், ரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட வியாதிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மக்களை தேடி மருத்துவத்தில் சேர்க்கப்பட்டு மருத்துவ உதவிகள் வழங்கப்படும்.

நோய்களில் இருந்து மக்களை காக்க வேண்டும். நோய்கள் மக்களை தாக்காதவாறு தடுக்க வேண்டும் என்ற முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணத்தின்படி நாளை முதல் இந்த திட்டம் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,650 மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இதன்படி விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகை ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மாணவர்களும், ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூர் மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.


Tags:    

Similar News