ஆன்மிகம்
முருகப்பெருமான் சூரனை வதம் செய்த போது எடுத்த படம்.

மருதமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் பக்தர்கள் இல்லாமல் எளிமையாக நடந்தது

Published On 2020-11-21 07:36 GMT   |   Update On 2020-11-21 07:36 GMT
மருதமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. இந்த நிகழ்ச்சி பக்தர்கள் இல்லாமல் எளிமையாக நடைபெற்றது.
கோவையை அடுத்த மருதமலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 15-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை தொடர்ந்து கோவில் நடை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. பின்னர் பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம், போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. கந்தசஷ்டி விழாவின் 6-ம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு சண்முகார்ச்சனையும் 9 மணிக்கு யாகசாலை பூஜையும் நடைபெற்றது மதியம் 12 மணியளவில் உற்சவர் முருகப்பெருமான் சண்முகார்ச்சனையும் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

இதையடுத்து மதியம் 2 மணிக்கு இடும்பன் கோவிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மதியம் 3 மணியளவில் சுப்பிரமணியசாமி பச்சை நாயகி அம்மன் சன்னதியில் அன்னையிடம் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து வீரநடன காட்சி நடைபெற்றன. இதையடுத்து சுப்பிரமணியசாமி வேலை பெற்றுக்கொண்டு சூரசம்ஹாரம் செய்ய கோவில் முன்புறம் ஆட்டுக்கடா வாகனத்திலும், வீரபாகு குதிரை வாகனத்திலும் எழுந்தருளினர். முதலாவதாக தாரகசூரனையும், இரண்டாவதாக பானுகோபன் வதம், மூன்றாவதாக சிங்க முகாசுரன் வதம், நான்காவதாக சூரபத்மனை வதம் செய்தனர். அப்போது கூடியிருந்த அர்ச்சர்களும் திருக்கோவில் ஊழியர்களும் ’முருகனுக்கு அரோகரா‘ ’கந்தனுக்கு அரோகரா‘ என்று கோஷமிட்டனர்.

பின்னர் வெற்றி வாகை சூடுதல், சேவல் கொடி சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் 4.30. மணி அளவில் சூரசம்ஹாரம் செய்த முருகப் பெருமானின் கோபத்தை தணிக்கும் விதமாக மகாஅபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

கொரோனோ பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் ஆகியோரை வைத்து சூரசம்ஹார விழா எளிமையாக நடந்து முடிந்தது. சூரசம்ஹாரத்தில் கலந்து கொள்ள வந்த பக்தர்கள் மலைக்கோயில் செல்லும் அடிவாரத்தில் பக்தர்கள் திரளாக கூடியிருந்தனர். அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சூரசம்ஹார விழா நிறைவடைந்தவுடன் மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கி 8.30 மணிக்கு யாகசாலையில் உள்ள கலச தீர்த்தங்களால் மூலவருக்கு அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 10 மணிக்கு வள்ளி தெய்வானை சமேதரராய் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வீதி உலா வருகிறார்.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் பக்தர்களுக்கு தடைவிதித்துள்ளது. திருக்கல்யாண நிகழ்ச்சி முடிந்த பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நெகமம்-காளியப்பன்பாளையம் தங்கவேல் அய்யன் வேலாயுதசாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி நேற்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.

இதனை தொடர்ந்து அபிஷேகம், அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை 10.45 மணிக்கு கோ பூஜை, விநாயகர் வழிபாடு, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம், மாலை 6 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் திருத்தேரில் திருவீதி உலா, ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடைபெறுகிறது.
Tags:    

Similar News