ஆன்மிகம்
பூச்சொரிதல் விழாவையொட்டி கோவில் சார்பில் பூத்தட்டுகள் எடுத்துச் செல்லப்பட்ட காட்சி.

உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா

Published On 2021-03-20 03:59 GMT   |   Update On 2021-03-20 03:59 GMT
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது. பக்தர்கள் நூற்றுக்கணக்கான பூத்தட்டுகளுடன் வந்து குவிந்தனர்.

திருச்சி உறையூரில் வானத்தையே கூரையாக கொண்டு காற்று, மழை, வெயில் என அனைத்து இயற்கை இடர்பாடுகளையும் தன்னகத்தே தாங்கிக் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் வெக்காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி நேற்று காலை 6.30 மணி அளவில் கோவில் நிர்வாகம் சார்பில் உதவி ஆணையர் ஞானசேகரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து அம்மனுக்கு பூத்தட்டுகளை வைத்து சிறப்பு தீபாராதனை செய்தனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் பூ கூடைகளுடன் ஊர்வலமாக வந்து வழிபாடு செய்தனர்.

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நூற்றுக்கணக்கான பூத்தட்டுகளுடன் வந்து குவிந்தனர். காலையில் தொடங்கிய பூச்சொரிதல் விழா நள்ளிரவை தாண்டி விடிய விடிய நீடித்தது.

பூச்சொரிதல் விழாவையொட்டி கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது பூச்சொரிதல் விழாவையொட்டி வெக்காளியம்மன் கோவில் மூலஸ்தானம் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
Tags:    

Similar News