செய்திகள்
ஏரிக்கு செல்லும் கால்வாயை கண்காணிப்பு அலுவலர் லட்சுமி பிரியா, கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டபோது எடுத்த படம்.

வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

Published On 2021-10-09 13:28 GMT   |   Update On 2021-10-09 13:28 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லட்சுமி பிரியா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லட்சுமி பிரியா கூறுகையில், அனைத்துத்துறை அலுவலர்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மழைக்காலங்களில் எவ்வித பிரச்சினைகளும் இன்றி புகார்களுக்கு இடமளிக்காமல் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்துத் தாலுகாக்களிலும் மொத்தம் 1743 முதல் தகவல் அளிப்பவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வெள்ள பாதிப்பு குறித்துத் தகவல் அளிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இடர்பாடு காலங்களில் அவசர உதவிகளுக்கு 23 ஜெனரேட்டர், 12 தண்ணீர் இறைக்கும் மோட்டார் எந்திரம், 33 மரம் அறுக்கும் எந்திரங்கள் உள்ளன.

தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை வேறு இடங்களுக்கு மாற்றிட 47 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் இடங்கள் என 47 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், நீர்வள ஆதார செயற்பொறியாளர் ரமேஷ், அனைத்து கோட்டாட்சியர்கள், துணை கலெக்டர்கள், வட்டாட்சியர்கள், பொதுப்பணித் துறை அலுவலர்கள், உள்ளாட்சி துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம் கட்டுப்பாட்டிலுள்ள பாலாறு அணைக்கட்டு பகுதியில் இருந்து மகேந்திரவாடி ஏரிக்கு நெடுஞ்சாலை துறையின் குறுக்கே செல்லும் கால்வாயினை பார்வையிட்டனர். அதைப்போல் காவேரிப்பாக்கம் ஏரிக்கு செல்லும் கால்வாய் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News