உள்ளூர் செய்திகள்
மதுரை ஆதினம்

அரசியல்வாதி என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஆன்மீகவாதி பேசக் கூடாதா?- மதுரை ஆதீனம் கேள்வி

Published On 2022-05-07 05:56 GMT   |   Update On 2022-05-07 12:25 GMT
ஆன்மீகமும் அரசியலும் ஒன்றுதான். கோவிலில் அரசாங்கம்தானே இருக்கிறது. அரசியல்வாதிகள் தானே அறநிலைய துறை அமைச்சராகிறார்கள். நாம் கோவிலில் தலையிடுவதால் அரசியலும் ஆன்மீகமும் ஒன்றுதான்.

நாகர்கோவில்:

மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குமரி மாவட்டம் பாலபள்ளம் பகுதியில் நடந்த கோவில் கும்பாபிேஷகத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆன்மீகமும் அரசியலும் ஒன்றுதான். கோவிலில் அரசாங்கம்தானே இருக்கிறது. அரசியல்வாதிகள் தானே அறநிலைய துறை அமைச்சராகிறார்கள். நாம் கோவிலில் தலையிடுவதால் அரசியலும் ஆன்மீகமும் ஒன்றுதான்.

தருமபுர ஆதீனம் பட்டண பிரவேசத்திற்கு தடை விதித்தது ஏன்? பட்டண பிரவேசத்திற்கு எதிர்ப்பு இருப்பதால் தான், ஆதரவு அதிகமாக இருக்கிறது. பல்லக்கு சுமக்க எதிர்ப்பு ஏற்பட்டதால், நான் உள்பட தமிழ்நாடே சுமக்க தயாராக உள்ளது.

இந்த விஷயத்தில் சுமூக தீர்வு ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறியிருப்பது நல்லது, பாராட்டத்தக்கது. இதை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும்.

இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் மகா சிவராத்திரி பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்படவில்லை. இது குறித்து பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கப்படும். தமிழக அரசிடம் கேட்டாலும் பயன் இல்லை.

பிரதமரை சந்திக்க கூடிய நேரம் வரும்போது சந்திப்பேன். இவர்கள் ஓவராக சென்றால் பிரதமரை சந்திக்க வேண்டியது தான். எனக்கு டெலிபோனில் மிரட்டல் விடுத்தார்கள்.

மடத்துப் பிரச்சினையை மத பிரச்சனையாக ஆக்கியது யார்? அரசியல்வாதி என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆன்மீகவாதி பேசக் கூடாதா? ஆன்மீகத்தில் பிரச்சினை என்றால் நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News