ஆன்மிகம்
கும்பாபிஷேகம்

23 ஆண்டுக்கு பிறகு இன்று காலை பக்தர்கள் இன்றி நடைபெற்ற வைத்தீஸ்வரன் கோவில் குடமுழுக்கு விழா

Published On 2021-04-29 03:16 GMT   |   Update On 2021-04-29 05:46 GMT
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்குவிழா சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி பக்தர்கள் பங்கேற்பின்றி, அரசின் நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.
சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்திய நாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோயிலில் தனி சன்னதியில் செல்வ முத்துக்குமார சுவாமி, நவக் கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் தன்வந்திரிசுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.

செவ்வாய் பரிகார தலமாகவும், நோய் தீர்க்கும் தலமாகவும் விளங்கும் இக்கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு விழா நடந்தது. இதையொட்டி கடந்த 25-ந் தேதி 8 கால யாகசாலை பூஜைகளுக்காக 147 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு அதில் 108 மூலிகை பொருட்கள் இட்டு நடந்து வந்தது.

நேற்று காலை பரிவார யாக பூஜைகள் தொடங்கி, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை செய்விக்கப்பட்டு, யாகசாலைகளிலிருந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் வேதமந்திரங்கள் முழங்கிட சிவாச்சாரியார்களால் புறப்பாடு ஆகி, மேள, தாளங்கள் முழங்கிட கோவிலை வலம் வந்து ஆதிவைத்தியநாதர், வலஞ்சுழி வினாயகர், வீரபத்திரர், தெட்சிணாமூர்த்தி, துர்க்கைஅம்மன், பத்ரகாளியம்மன், நவகிரகங்கள் ஆகிய பரிவார தெய்வங்களின் சன்னதி விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

தொடர்ந்து இன்று காலை 8ம் கால யாகசாலைபூஜைகள் நிறைவடைந்து, புனிதநீர் அடங்கிய கடங்கள், வேதமந்திரங்கள் முழங்கிட புறப்பட்டு கோயிலை வலம் வந்து கற்பக வினாயகர், வைத்தியநாதசுவாமி, தையல்நாயகிஅம்மன், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன் மூலவர் விமானங்கள், 6கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னியிலையில் குடமுழுக்கு நடைபெற்றது.

இதில் நீதிமன்ற உத்தரவின்படி பக்தர்கள் யாரும் கோவில் உள்ளேயும் வெளிவட்ட சாலைகளிலும் அனுமதிக்கப்படவில்லை. கோவிலை சுற்றியுள்ள வீடுகளில் இருந்த பக்தர்கள் மாடிகள் மீது ஏறி குடமுழுக்கை தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி விக்ராந்த் ராஜா, சென்னை உயர்நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் வலிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி பார்கவி ஆகியோர் மட்டும் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். இதனால் எளிமையான முறையில் குடமுழுக்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News